கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி இருப்பதாகவும் எண்ணற்ற கட்டடங்கள் தரைமட்டமாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவத்துக்குச் சொந்தமான நாய் ஒன்று, 4 வயது பாலஸ்தீன சிறுவனைக் கடித்துக் குதறியிருப்பதாக அந்நாட்டின் சர்வதேச குழந்தைகள் பாதுகப்பு அமைப்பின் ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் ராணுவம் காசாவில் புகுந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி, ஹஷாஷ் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பிற்குள் இஸ்ரேல் ராணுவம் தங்களுக்குச் சொந்தமான நாயை அவிழ்த்துவிட்டதாகவும், அந்த நாய் அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் இருந்த இப்ராகிம் ஹஷாஷ் என்ற 4 வயது சிறுவனைக் கடித்துக் குதறியிருப்பதாகவும் பாலஸ்தீன சர்வதேச குழந்தைகள் பாதுகப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், அந்த நாய், இப்ராகிமை கிட்டத்தட்ட 3 நிமிடங்களுக்கு தொடர்ந்து கடித்ததாகவும், இதனால் அந்தச் சிறுவனை சதை வெளியேறி ரத்தம் கொட்டியதாகவும் அது தெரிவித்துள்ளது. அதன் பின்னரே, இஸ்ரேல் ராணுவத்தினர் நாயைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுவன் தற்போது நப்ளஸில் உள்ள ரஃபிடியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
‘இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனக் குழந்தைகளைப் பாதுகாப்பதில் அலட்சியம் செய்துவருகிறது’ என பாலஸ்தீனத்தின் சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் திட்ட இயக்குநர் அயெட் அபு இக்டாய்ஷ் குற்றம்சாட்டியுள்ளார். இஸ்ரேலின் ராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளான பகுதிகளில் குழந்தைகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இப்ராகிமின் தாயார், ‘நாய், தன் மகனைக் கடுமையாகக் குரைத்தபடியே தாக்கியது. இதனால் தன் மகன் கடுமையாகச் சத்தம் போட்டார். ஆனால் நாய் விடுவதாக இல்லை. தொடர்ந்து ரத்தம் கொட்டியது. அவரை உடனே நாயிடமிருந்து காப்பாற்றவும் முடியவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது பாதிக்கப்பட்ட சிறுவன் இப்ராகிமுக்கு பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை செய்யப்பட இருப்பதால் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு உள்ளார். இஸ்ரேல் ராணுவம் தனது நாய்கள் மூலம் பொதுமக்களையும், குழந்தைகளையும் தொடர்ந்து தாக்கிவருகிறது என அந்த அமைப்பு தெரிவிக்கிறது. இதுகுறித்த காணொளியை தனது யூடியூப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளது. 2023இல் பாலஸ்தீனிய குழந்தைகள் இஸ்ரேலிய ராணுவ நாய்களால் தாக்கப்பட்ட நான்கு வழக்குகளை DCIP ஆவணப்படுத்தி உள்ளது. இந்த வழக்குகளில் துல்கரேமில் 13 வயது சிறுவனும், ஜெனினில் 14 வயது சிறுமியும், துபாஸில் 8 மற்றும் 12 வயதுடைய இரண்டு உடன்பிறப்புகள் இதுவரை பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.