israel - palastine war file image
உலகம்

நரகமாகும் காஸா.. தண்ணீர் இன்றி தவிக்கும் பாலஸ்தீனர்கள்.. வன்மத்தோடு கைத்தட்டி சிரிக்கும் இஸ்ரேல்!

போர் காரணமாக காஸா மக்கள் தவித்து வரும் நிலையில், அவர்களைப்போலவே வேடம் அணிந்து நகைச்சுவை என்ற பெயரில் வன்மத்துடன் வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்களின் செயல், இணையத்தில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

யுவபுருஷ்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்து வரும் போர் 20வது நாளை எட்டியுள்ளது. இதில் காஸா நகரம், அங்கிருக்கும் மக்களுக்கு நரகமாக மாறிவருகிறது. இந்த போரில் சுமார் 23 லட்சம் பேர் இஸ்ரேலின் குண்டு மழைக்கு இடையே சிக்கி தவித்து வருகின்றனர். 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மருத்துவம், குடிநீர், உணவு, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தவித்து வரும் பாலஸ்தீன மக்களைப் போல் வேடமணிந்து இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் சிலர் வீடியோவை எடுத்து அதனை டிக்டாக் போன்ற சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். பெரும்பாலான வீடியோக்களில் குழந்தைகளையும் நடிக்க வைத்துள்ளனர்.

தண்ணீருக்கு தவிப்பது, மின்சாரம் இல்லாமல் இருப்பது, வீடுகளை விட்டு வெளியேறுவது, ரத்தக்காயத்துடன் இருப்பது போன்று பாலஸ்தீன மக்களின் பாதிப்புகளை எள்ளி நகையாடும் விதமாக நடிக்கச்செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோக்களுக்கு சிலர் ரிப்போர்ட் கொடுத்த நிலையில், எச்சரிக்கை குறி போடப்பட்டு, சில வீடியோக்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், சிலரது சமூகவலைதள பக்கங்களே முடக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்த வீடியோக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த நெட்டிசன்கள், போர் சமயத்தில் உயிருக்கு போராடும் மக்களை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிடுவதா என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த வீடியோக்களின் பின்னுள்ள வன்மம், நம்மையும் அதிரச்செய்கிறது.