America pt web
உலகம்

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் மடியும் அப்பாவி மக்கள்: அமெரிக்கா, இங்கிலாந்திலும் வெடித்தது மக்கள் போராட்டம்

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா கனடா போன்ற நாடுகளிலும் எதிரொலித்தது. அந்த நாடுகளில் நடந்த போராட்டத்தில் இருதரப்பு ஆதரவாளர்களும் பங்கேற்றனர்.

PT WEB

இஸ்ரேல் - ஹமாஸ் படையினர் இடையேயான மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இரு பகுதிகளை சேர்த்து உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 700-ஐ கடந்துள்ளது. இரு பிரிவுகள் இடையிலான மோதலால் காஸாவில் அப்பாவி மக்கள் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போட்டிபோட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் திடீரென பதற்றமான சூழல் நிலவியது.

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஹமாஸ் குழுவினருக்கு ஆதரவாக பாலஸ்தீனர்கள் ஏராளமானோர் திரண்டனர். அப்போது அவர்கள் இஸ்ரேலுக்கு எதிராகவும், உலக நாடுகள் தாக்குதலை தடுத்து நிறுத்தி அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அதேநேரத்தில் அங்கு இஸ்ரேல் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டு போட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேல் தாக்குதலுக்கு ஆதரவாகவும், ஹமாஸ் தாக்குதலுக்கு எதிராகவும் கண்டணம் தெரிவித்து அப்போது முழக்கம் எழுப்பினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானதால் பதற்றமான சூழல் நிலவியது. பின்னர் காவல்துறையினர் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுப்படுத்தினர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு துணை நிற்போம் என தெரிவித்துள்ளார். பாலஸ்தீனர்களின் உரிமைகளை மதிக்கிறோம் என்றும் ஹமாஸின் தாக்குதலைக் கண்டிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இங்கிலாந்திலும் பாலஸ்தீன ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்கள் கென்சிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திறேகு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என்றும் பாலஸ்தீனை விடுவிக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கனடா டொரண்டோவில் உள்ள பிலிப்ஸ் மாகாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடி பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீனத்தை விடுவிக்க வேண்டும் என்ற பதாகைகளை கொண்டும் பாலஸ்தீன கொடிகளைக் கொண்டும் மக்கள் கோஷங்களை எழுப்பினர். பாலஸ்தீனர்களை இஸ்ரேல் எவ்வாறு தவறாக நடத்துகிறது என்றும் இஸ்ரேல் பல ஆண்டுகளாக பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ளது என்றும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் ஆஸ்திரேலியா சிட்னியிலும் மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் சிட்னி வானொலியில் இது குறித்து உரையாற்றினார். இரு நாடுகளுக்கு இடையே எட்டப்படும் தீர்விற்கு ஆதரவாளராக தான் இருப்பதாக கூறிய அவர் ஹமாஸின் தாக்குதல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்களின் நலனுக்காக இல்லை என்றார்.

காஸாவில் இஸ்ரேல் - ஹமாஸ் படையினர் இடையே போர் தீவிரமடைந்த நிலையில், இதில் அப்பாவி மக்கள் கொத்துகொத்தாக கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கு உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.