கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் லெபனானில் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகிறது. கடந்த 17 ஆம் தேதி பேஜர் மூலம் லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. தொடர்ந்து, இஸ்ரேலின் ராணுவ நிலைகள் மீது ராக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்திய நிலையில், பதிலுக்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதலை நடத்தி உள்ளன.
300 இலக்குகளை குறிவைத்து நடத்திய வான்வழித் தாக்குதலில், 35 குழந்தைகள் உட்பட 492 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், 1,645 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் நாட்களில் லெபனான் மீதான தாக்குதல் தீவிரமாகும் என்பதால், தெற்கு லெபனானில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்த உள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.