உலகம்

ஊடகங்களை முடக்க முயற்சிக்கும் இஸ்ரேல்: அல்ஜஸீரா குற்றச்சாட்டு

ஊடகங்களை முடக்க முயற்சிக்கும் இஸ்ரேல்: அல்ஜஸீரா குற்றச்சாட்டு

webteam

சுயேட்சையான ஊடகவியலை முடக்குவதற்கு இஸ்ரேல் முயற்சிப்பதாக அல்ஜஸீரா தொலைக்காட்சி குற்றம்சாட்டி இருக்கிறது.

இது தொடர்பாக அல்ஜஸீரா மூத்த செய்தியாளர் ஜமாஸ் எல் ஸயல் அளித்த பேட்டியில், இஸ்ரேலின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார்.

மதப் பிளவுகளைத் தூண்டுவதாகக் கூறி அல்ஜஸீராவின் கிளை அலுவலகத்தை மூடுவதற்கு இஸ்ரேல் அரசு உத்தரவிட்டிருக்கிறது. இஸ்ரேலில் உள்ள அல்ஜஸீரா செய்தியாளர்களின் அங்கீகாரத்தையும் ரத்து செய்திருக்கிறது.

அல்ஜஸீரா தொலைக்காட்சியை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு அம்னெஸ்டி அமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது. தங்கள் மீதான விமர்சனங்களை இஸ்ரேல் ஆட்சியாளர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்கு இதுவே உதாரணம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இஸ்ரேலிலும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளிலும் ஊடகங்களை முடக்குவதற்கான முயற்சி இது என்று அம்னெஸ்டி அமைப்பு குற்றம்சாட்டியிருக்கிறது.

கத்தார் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அல்ஜஸீரா தொலைக்காட்சி, அரசின் தலையீடு இல்லாமல் சுயேச்சையாக இயங்கிக் கொண்டிருப்பதாகவே தன்னை அறிவித்துக் கொள்கிறது. எனினும், இஸ்லாமிய சன்னி பிரிவுக்கு ஆதரவாகவும், ஷியா பிரிவுக்கு எதிராகவும் இதன் செய்திகள் இருப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கருத்துகளை பரப்புவதாகவும் அல்ஜஸீரா மீது குற்றச்சாட்டு உண்டு. ஆனால் அல்ஜஸீரா இதை அவ்வப்போது மறுத்திருக்கிறது.

ஈரானின் பார்வையையும், இஸ்ரேலின் பார்வையையும்கூட தாங்கள் ஒளிபரப்பி வருவதாக அல்ஜஸீரா கூறி வருகிறது. கத்தார் நாட்டின் அடையாளமாகவும், ஆன்மாகவாகவும் இந்தத் தொலைக்காட்சியை அந்நாட்டு அரசாங்கம் பார்க்கிறது. அதனாலேயே, இந்தத் தொலைக்காட்சியை மூடுவதற்கு சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக முயற்சி செய்தபோதும் அதற்கு அடிபணிய கத்தார் மறுத்துவிட்டது. இப்போது இஸ்லாமிய நாடுகளுக்கெல்லாம் எதிரியாகக் கருதப்படும் இஸ்ரேலும் அல்ஜஸீராவை மூடுவதற்கு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.