israel and yemen pt
உலகம்

ஏமனில் குண்டு மழை பெய்த இஸ்ரேல்.. பற்றி எரியும் மத்திய கிழக்கு..!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், தங்களது நாட்டின் மீது தாக்குதல் நடத்திய ஹவுதிக்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது இஸ்ரேல்.

யுவபுருஷ்

இஸ்ரேல் - காஸா இடையேயான போர் கிட்டத்தட்ட ஓராண்டை நெருங்கும் நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் இன்னமும் நீடித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸின் திடீர் தாக்குதலில் தொடங்கிய போர், நிற்காமல் தொடர்கிறது.

இந்த கொடூர தாக்குதல்களால் இதுவரை காஸாவில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்து இருக்கின்றனர்.

உலக நாடுகள், சர்வதேச நீதிமன்றம் கண்டித்தும் இன்றளவும் காஸா மீது அடக்குமுறைகளை தொடர்ந்து வருகிறது இஸ்ரேல். இதற்கிடையேதான், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு கொடுத்து வரும் ஹவுத்திக்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். முன்னதாகவே தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதலை நடத்தியது ஹவுதி குழு. அமெரிக்க தூதரகத்திற்கு மிக அருகாமையில் நடந்த அந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹவுதிக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏமனில் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல்.

ஏமன் மீது இஸ்ரேல் தாக்கியது இதுவே முதல்முறையாகும். ஹவுதிக்களின் முக்கிய தளவாடங்களில் ஒன்றான ஏமான் ஹொதைதா நகரில் இருக்கும் துறைமுகத்தின் மீது இஸ்ரேல் பெய்த குண்டு மழையால், மூன்று பேர் உயிரிழந்த நிலையில் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் - காஸா இடையே நடந்து வரும் இந்த போரில் ஹமாஸ் இயக்கத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது ஹவுதி குழு. போர் நிறுத்தம் வரை தங்களது ஆதரவு தொடரும் என்று கூறியதோடு, இஸ்ரேலின் தளவாடங்களை தாக்கி வந்தது ஹவுதி. கடைசியாக தலைநகர் டெல் அவிவ் மீது தாக்குதல் நடத்தியதால், இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், மத்தியக்கிழக்கு மீண்டும் தீவிரமாக பற்றி எரியத்தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “இஸ்ரேலியர்களின் ரத்தத்திற்கென ஒரு விலை உண்டு. எங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்த முனைந்தால், இப்போது போல் பல தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும்.

பற்றி எரியும் இந்த தீயைப் பற்றி ஒட்டுமொத்த மத்திய கிழக்கிற்கும் தெரியும்” என்று கூறியுள்ளார். இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து காஸா ஆதரவு நாடுகள் குரல் கொடுத்து வந்தாலும், அது எதையும் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.