இஸ்ரேல்- ஹமாஸ் போர் pt web
உலகம்

பெரிய தாக்குதல்? ஹிஸ்புல்லாவிற்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல்

PT WEB

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் 5-ஆவது நாளாக நீடிக்கும் சூழலில் காசா பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பிற்கும் இடையே நடந்துவரும் தொடர் சண்டையில் இதுவரை இஸ்ரேலில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

காசாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதேநேரத்தில் ஹமாஸ் குழுவினர் ஆயிரத்து 500 பேரை சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. காஸா பகுதியை சுற்றிவளைத்து இஸ்ரேல் இடைவிடாது நடத்தும் தாக்குதலில் பல கட்டடங்கள் சின்னாபின்னமாகியுள்ளன.

தாக்குதலை தொடங்கியது ஹாமஸ் குழுவாக இருந்தாலும் பதில் தாக்குதலை இஸ்ரேல் பல முனைகளில் இருந்து தொடுத்து வருகிறது. காசாவை ஒட்டி தெற்கு இஸ்ரேலில் உள்ள அக்கெலான் நகர் மக்களுக்கு விதித்த கெடு நிறைவடைந்ததும் காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினர். மக்கள் ஏற்கெனவே பாதுகாப்பான மறைவிடங்களுக்கு சென்றுவிட்டதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அக்கெலான் நகர் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தினாலும் மறுபுறம் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்கிறது. இஸ்ரேலிய நிலைகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய சாதாரண பீரங்கி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் மட்டுப்படுத்திய நிலையில் லெபனானின் தெற்கு எல்லைகளில் உள்ள நிலைமை இப்போது அமைதியாக உள்ளது. ஆனால், இஸ்ரேல்-ஹமாஸ் மோதலின் அச்சுறுத்தல் லெபனான் நாடு முழுவதிலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இரானிய ஆதரவு குழுவான ஹிஸ்புல்லா தனது இலக்கை கவனமாக தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்தியது. ஆனால் அதை விடப் பெரிய அளவில் அந்த அமைப்பு தாக்குதல் நடத்த முடியும். ஏவுதளம் மற்றும் பிற தளங்களை குறிவைத்து உடனடியாக பதிலடி கொடுத்த இஸ்ரேல் ஏற்கெனவே தனது வடக்கு எல்லைக்கு வலுவான ராணுவ குழுக்களை அனுப்பியுள்ளது. காசாவில் தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் முடிவெடுத்து அதற்கான நகர்வை தீவிரப்படுத்தியுள்ளது.