இஸ்லாமிய ஜிஹாத் pt web
உலகம்

பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாதி... இஸ்ரேல் கைகாட்டும் இந்த அமைப்பின் பின்னணி இதுதான்..!

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காஸாவில் இருக்கும் மருத்துவமனை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டது உலகெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

karthi Kg

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காஸாவில் இருக்கும் மருத்துவமனை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டது உலகெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பாலஸ்தீன ஊடகங்களும், ஹமாஸும் இது முழுக்க முழுக்க இஸ்ரேலின் செயல் என குற்றம் சாட்டியது. இஸ்ரேல் அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என பல அமைப்புகள் குற்றம் சாட்டிவருகின்றன.

இஸ்ரேல் அரசோ முதலில் இதைச் செய்தது ஹமாஸ் அமைப்பு என்றும், அதன் பின்னர் 'பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாதி' என்றும் அறிக்கை வெளியிட்டது. அவர்கள் தவறுதலாக செய்துவிட்டனர் என்பதுதான் இஸ்ரேல் சொல்லும் காரணம். இஸ்ரேல் நோக்கி இந்த அமைப்பு வீசிய குண்டுதான் தவறுதலாக காஸாவின் மருத்துவமனை மீது என்கிறார்கள். இஸ்ரேலும், அமெரிக்காவும் சொல்லும் இந்த விளக்கத்தை பலர் ஏற்கவில்லை என்பதே உண்மை.

சரி, யார் இந்த பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாதி. இவர்களுக்கும் ஹமாஸுக்கும் என்ன தொடர்பு..? இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

ஹமாஸைப் போல் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பிற்கு அரசியல் பிரிவெல்லாம் கிடையாது. ஹமாஸிலோ, வெஸ்ட் பேங்கிலோ ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்கிற ஆசையும் அவர்களுக்கு இல்லை. இஸ்ரேலுக்கு எதிராக தங்கள் மக்களுக்கு போர் மூலமாக மட்டுமே தீர்வு கிடைக்கும் என உறுதியாக நம்பும் குழுதான் PIJ. அரசியல் மூலம் இஸ்ரேலை வெல்ல முடியாது என்பதே PIJ-ன் எண்ணம். ஹமாஸ் அமைப்பு தங்களை காஸாவுக்குள் சுருக்கிக்கொள்ள, பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாதி அமைப்போ வெஸ்ட் பேங்க் பகுதியிலும் செயல்பட்டுவருகிறது. இந்த குழு இஸ்ரேலுக்கு எதிராக ராக்கெட்டுகளை ஏவுவது வழக்கம். லெபனான் பகுதியிலிருந்து இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருப்பதும் இந்த அமைப்புதான்.

கடந்த மே மாதம், இஸ்ரேலிய சிறைச்சாலையில் PIJயின் உயர்மட்ட உறுப்பினர்களில் ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து 100 ராக்கெட்டுகளை இஸ்ரேல் மேல் வீசியது. ஒரு வாரம் கழித்து, இஸ்ரேலிய போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி மூன்று இஸ்லாமிய ஜிஹாத் தலைவர்களை தனித்தனி குடியிருப்புகளில் கொன்றன. இப்படியாக இஸ்ரேலுக்கும், இந்த அமைப்புக்கான சண்டை என்பது பல காலமாக நடந்துகொண்டிருப்பதுதான். இதனாலேயே மருத்துவமனை குண்டுவீச்சை இந்த அமைப்பின் மீது எழுதிவிட்டு கை கழுவப் பார்க்கிறது இஸ்ரேல் என்கிற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

அமெரிக்காவின் கூற்றுப்படி, PIJ தனது நிதியில் பெரும்பகுதியை ஈரானிடமிருந்து பெறுகிறது. இஸ்ரேலிய ராணுவத்தின் கூற்றுப்படி ஆண்டுக்கு 70 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஈரான் PIJ அமைப்புக்கு உதவி செய்கிறது. சிரியா, காஸாவில் உள்ள பணக்கார பாலஸ்தீனியர்களிடமிருந்து நன்கொடைகள் மற்றும் வெளிநாடுகளில் சில நிதி திரட்டுதல் போன்றவையும் PIJயின் நிதித் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. இந்தக் குழுவின் தலைமையகம் டமாஸ்கஸில் இருக்கிறது. அங்கு தற்போதைய தலைவர் ஜியாத் அல்-நகாலா வசிக்கிறார். தெஹ்ரானிலும் சில அலுவலகங்கள் இருக்கின்றன.