முகமது டெய்ஃப்  எக்ஸ் தளம்
உலகம்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி படுகொலை! யார் இந்த முகமது டெய்ஃப்?

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது டெய்ஃப் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

Prakash J

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர், இஸ்ரேலுக்குள் புகுந்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். இதில் இஸ்ரேல் தரப்பில் 1,197 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 250க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்குப் பழிவாங்கும் விதமாக இஸ்ரேல் காஸா மீது இன்றுவரை போர் தொடுத்து வருகிறது.

இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 39,480 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் பசி, பஞ்சம் ஆகியன நிலவி வருகிறது. மருத்துவ உதவிகள் கிடைக்காமலும் மக்கள் சிரமப்படுகின்றனர். என்றாலும் ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் எனக் கூறி இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதையும் படிக்க: பாரீஸ் ஒலிம்பிக்: காதலருடன் நைட் அவுட்டிங்.. நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட நீச்சல் வீராங்கனை!

இதனிடையே ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக, ஈரான் நாட்டின் ராணுவ புரட்சிகரப் படைப்பிரிவு அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அவரது படுகொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது டெய்ஃப் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

யார் இந்த முகமது டெய்ஃப்?

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முகமது டெய்ஃப், ஹமாஸின் ஆயுதப் பிரிவான Ezzedine al-Qassam படைப்பிரிவின் தலைவராக இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூலை 13-ஆம் தேதி தெற்கு காசாவில் முகமது டெய்ஃப் வசித்துவந்த கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் முகமது டெய்ஃப் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்த செய்தியை இஸ்ரேல் பாதுகாப்பு படை தற்போது உறுதி செய்துள்ளது.

இந்த தாக்குதலில் 90க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இந்தத் தாக்குதலின்போது டெய்ஃப் உயிரிழக்கவில்லை என ஹமாஸால் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முகமது டெய்ஃப், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக இஸ்ரேலின் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவராக உள்ளார். 2015ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலிலும் அவர் இடம்பிடித்து இருந்தார். டெய்ஃப் பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு எதிராக பல தாக்குதல்களை நடத்தியதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், காஸாவில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வாருடன் இணைந்து டெய்ஃப் செயல்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: பயனர் விவரங்களை கேட்ட விவகாரம்: இந்தியாவிலிருந்து வெளியேறும் வாட்ஸ்அப்? மத்திய அரசு சொன்ன பதில்!