இஸ்ரேல் மீது கடந்த 7ஆம் தேதி ஏவுகணை தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்கு ஊடுருவி 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக இழுத்துச் சென்றனர். இதில், இஸ்ரேலியர்கள் மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடியில் சிக்கினர். போருக்கு நடுவே இஸ்ரேல் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கு துணை நிற்பதாகவும், ஹமாஸ் பிடியில் பிணைக் கைதிகளாக இருப்பவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி இருந்தார்.
இந்த நிலையில், பிணைக் கைதிகளாக இருந்த அமெரிக்காவை சேர்ந்த ஒரு தாய் மற்றும் மகளை ஹமாஸ் விடுவித்துள்ளதாகவும் அவர்கள் இஸ்ரேல் வந்துவிட்டதாகவும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிணைக்கைதிகள் விடுவிப்பு தொடர்பாக கத்தார் அரசு சமரச பேச்சு நடத்தியதை அடுத்து அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க பிணைக்கைதிகள் இருவர் விடுவிக்கப்பட்டதற்கு அதிபர் ஜோ பைடன் வரவேற்பு தெரிவித்துள்ளார். பெருமகிழ்ச்சி அளிப்பதாகவும், கத்தார் மற்றும் இஸ்ரேலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.