இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எக்ஸ் தளம்
உலகம்

இஸ்ரேல் - காஸா போர்| ”முடிவுக்கு வர ஹமாஸ் இதைச் செய்ய வேண்டும்” - பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தல்!

”இஸ்ரேல் - காஸா இடையே போர் முடிவுக்கு வர ஹமாஸ் இதைச் செய்ய வேண்டும்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

Prakash J

இஸ்ரேல் - காஸா இடையேயான போரில், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தியது. இதில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கிடையே, ஈரான் நாட்டின் தளபதி உள்ளிட்ட முக்கிய நபர்களும் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவ்வமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபட்டது.

இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது உலக அளவில் பேசுபொருளானது. ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ”ஈரான் பெரும் தவறை செய்துவிட்டதாகவும், அதற்கான விலையை அந்நாடு கொடுக்க வேண்டி இருக்கும்” என்றும் எச்சரித்துள்ளார். அதேநேரத்தில், ”தேவைப்பட்டால் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்” என்று ஈரான் தலைவர் அலி காமினியும் தெரிவித்துள்ளார். இதனால், மத்திய கிழக்குப் பகுதியில் தொடர்ந்து பதற்றநிலை நீடித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஹமாஸை அழிக்கும்வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்த நிலையில், தொடர்ந்து அங்கு போர் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் யாஹியா சின்வார் கொலை செய்யப்பட்டார் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக உரையாற்றிய அவர், ”ஓராண்டுக்கு முன் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட யாஹியா சின்வார் மரணமடைந்து விட்டார். அவர் ராபாவில் நடந்த தாக்குதலில் இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்களால் கொல்லப்பட்டார். காஸாவில் நடந்து வரும் போர் இத்துடன் முடியவில்லை. ஆனால் இது முடிவிற்கான ஆரம்பமாகும்.

இதையும் படிக்க; ”நாம் பேசலாமா?”- பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்ற லாரன்ஸ் பிஷ்னோய்க்கு அழைப்புவிடுத்த பிரபல நடிகை!

காஸா மக்களிடம் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஹமாஸ் அமைப்பினர் தங்கள் ஆயுதங்களை சமர்ப்பித்து, பணய கைதிகளை விடுவித்தால் அடுத்த நாளே இந்த போர் முடிவுக்கு வரலாம். ஹமாஸ் அமைப்பினரிடம் தற்போது 23 நாடுகளின் குடிமக்கள் மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 101 பேர் பணய கைதிகளாக உள்ளனர். அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது.

பணய கைதிகளை எங்களிடம் ஒப்படைக்க வருபவர்களின் பாதுகாப்பிற்கு இஸ்ரேல் உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் பணய கைதிகளை துன்புறுத்துபவர்களிடம் நான் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். இஸ்ரேல் உங்களை வேட்டையாடி, நீதியை நிலைநாட்டும். மேலும் காஸா மக்களுக்கு நம்பிக்கைக்குரிய மற்றொரு செய்தியையும் கூறுகிறேன்.

ஈரானால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத கட்டமைப்பு நமது கண்முன்னால் அழிந்துகொண்டிருக்கிறது. நஸ்ரல்லா, மொஹ்சின், ஹானியே, டெய்ப், சின்வார் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். தனது சொந்த மக்களிடமும், ஈராக், சிரியா, லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளிலும் ஈரான் கட்டமைத்த பயங்கரவாத ஆட்சியும் விரைவில் முடிவுக்கு வரும்.

மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியும், செழிப்பும் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அனைவரும், ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஒன்றிணைய வேண்டும். நாம் ஒன்று சேர்ந்து இருள் சக்திகளை அழித்து, ஒளி மற்றும் நம்பிக்கையுடன் கூடிய எதிர்காலத்தை உருவாக்குவோம்” என அதில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - காஸா இடையே ஓராண்டைக் கடந்து போர் நடைபெற்றுவரும் மோதலில் இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.மேலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இந்த போரால் காஸாவில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இவர்களை மீட்கும் முயற்சியில்தான் இஸ்ரேல் அவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதையும் படிக்க: கேரளா|பிரிவுபசாரத்தின்போது ஊழல் குற்றச்சாட்டு! வேதனையில் அதிகாரி துயர முடிவு; மகள்கள் இறுதிச்சடங்கு!