இஸ்ரேல், ஈரான் எக்ஸ் தளம்
உலகம்

இஸ்ரேல் பிரதமர் உட்பட 11 பேருக்கு குறி.. பழிவாங்கும் ஈரான்? வைரலாகும் தகவல்.. உண்மை என்ன?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்லப்போவதாக ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

இஸ்ரேல் - காஸா இடையேயான போரில், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவ்வமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது. இதன்காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது, மேல் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதேநேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது குறித்து அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஈரான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டது. அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும்” என எச்சரித்துள்ளார். மேலும், இஸ்ரேலுக்கு அரணாக இருப்பதாகவும் அமெரிக்கா உறுதியளித்துள்ளது. ஆனால் ஈரானோ, “இது சாதாரண எச்சரிக்கைதான்.. இஸ்ரேல் மீண்டும் போர் நடவடிக்கையில் ஈடுபட்டால், இதைவிட விளைவுகள் கடுமையாக இருக்கும்” எனப் பதிலளித்துள்ளது.

இதையும் படிக்க: ஈரான் வீசிய ஏவுகணைகள்... தப்பிக்க ஓடினாரா இஸ்ரேல் பிரதமர்? வைரல் வீடியோ.. உண்மை என்ன?

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்லப்போவதாக ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் பிரதமர் மற்றும் அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் உள்ளிட்ட 11 பேர்களை, ‘பயங்கரவாதிகள்’ என பட்டியலிட்டு ஈரான் உளவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருப்பதாக இணையதளங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன. தவிர, ‘அவர்களைத் தீர்த்துக் கட்டுவோம்’ என ஹீப்ரு மொழியில் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்தத் தகவலை ஆங்கில ஊடகங்கள் மறுத்துள்ளன. இது வெறும் வதந்தி எனக் குறிப்பிடும் ஊடகங்கள், இதுகுறித்து யாரோ சிலர் தவறாகக் கிசுகிசுக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக ஈரானோ அல்லது அதற்குப் பதிலாக இஸ்ரேலோ எந்த அறிக்கையும் வெளியிடவில்லை எனத் தெளிவுப்படுத்தியுள்ளன. இருப்பினும், கிசுகிசுக்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஈரான் உளவுத்துறை இஸ்ரேலிய பிரதமரையோ அல்லது அந்நாட்டு மூத்த தலைவர்களையோ குறிவைக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. அதன்படி, அந்நாட்டு ராணுவத் தலைவர்கள் மற்றும் வடக்கு, தெற்கு, மத்திய கட்டளைத் தலைவர்கள், மேஜர் ஜெனரல்கள் ஆகியோர் குறிவைக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.

ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் ஆகியோரை இஸ்ரேல் ராணுவம் அழித்திருந்தது. மேலும், இஸ்ரேலியப் படைகள் 11 ஹிஸ்புல்லா தளபதிகளை கொன்றதாகவும் தெரிவித்திருந்தது. இதற்குப் பழிவாங்குவதற்காக ஈரான் இப்படி செய்தியைக் கசியவிட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. என்றாலும், மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இதையும் படிக்க: சமந்தா மணமுறிவு விவகாரம்| ”அந்தக் கருத்தில் இருந்து பின்வாங்கிவிட்டேன்; ஆனால்..“- தெலங்கானா அமைச்சர்