israel war x page
உலகம்

இஸ்ரேல்-காஸா போர் | 4 ராணுவ வீரர்களைக் கொன்ற ஹிஸ்புல்லா.. பதிலடியில் தரைப்படை தளபதி மரணம்

Prakash J

இஸ்ரேல் - காஸா இடையேயான போரில், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தியது. இதில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கிடையே, ஈரான் நாட்டின் தளபதி உள்ளிட்ட முக்கிய நபர்களும் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவ்வமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது உலக அளவில் பேசுபொருளானது. இதன்காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ”ஈரான் பெரும் தவறை செய்துவிட்டதாகவும், அதற்கான விலையை அந்நாடு கொடுக்க வேண்டி இருக்கும்” என்றும் எச்சரித்துள்ளார். அதேநேரத்தில், ”தேவைப்பட்டால் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்” என்று ஈரான் தலைவர் அலி காமினியும் தெரிவித்துள்ளார். இதனால், மத்திய கிழக்குப் பகுதியில் தொடர்ந்து பதற்றநிலை நீடித்து வருகிறது.

இதையும் படிக்க: நோபல் பரிசு வென்றதை கொண்டாட மறுத்த தென்கொரிய எழுத்தாளர்! வருத்தமான பின்னணி! உண்மையை உடைத்த தந்தை!

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஹிஸ்புல்லா நிலைகளின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தரைப்படை தளபதி மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று நடத்திய ட்ரோன் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியிருந்தது. மேலும், இந்த ட்ரோன் தாக்குதலில் 7 பேர் கவலைக்கிடமாக இருக்கிறார்கள் எனவும் 61 பேர் காயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேலின் தேசிய மீட்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிக்க: அமெரிக்கா | மூன்றாவது முறையாக முயற்சி.. ட்ரம்ப் பிரசாரத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்!