செய்தியாளர்: பால வெற்றிவேல்
ஏமன் நாட்டின் துறைமுக நகரான அல்-ஹுதைதா மீது இஸ்ரேலின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தது. செங்கடல் ஓரத்தில் அமைந்துள்ள அல்-ஹுதைதா நகர் ஹவுதி போராளி அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்திய நேரப்படி ஜூலை 20 மாலை 6 மணி அளவில் இஸ்ரேலின் போர் விமானங்கள் அல்-ஹுதைதா நகரின் துறைமுகம் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தபட்டதாக ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது.
துறைமுகத்தில் செயல்பட்டு வந்த எண்ணெய் கிடங்கு மீது நடத்தப்பட்ட தாக்குதலால், மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. அல்-ஹுதைதா துறைமுகத்தின் 70 சதவீத பகுதிகள் முழுமையாக தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்றும் ஹவுதி அமைப்பு அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஹவுதி அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கு பதிலடி கொடுக்கவே வான்வழி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. F-35 போர் விமானங்களில் இருந்து 25 க்கும் மேற்பட்ட குண்டுகள் அல்- ஹுதைதா நகர் மீது வீசப்பட்டுள்ளது. காசாவை ஆதரிப்பதை நிறுத்துமாறு ஏமனுக்கு அழுத்தம் கொடுப்பது நனவாகாத கனவு என இஸ்ரேலை ஹவுதி அமைப்பு கடுமையாக சாடியுள்ளது.
இஸ்ரேல் மட்டுமின்றி இந்த தாக்குதலுக்கு காரணமான அரபு நாடுகள் மீதும் பதிலடி கொடுக்கப்படும் என ஹவுதி எச்சரித்துள்ளது. ஏமன் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான், எகிப்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கண்டனத்தை தெரிவித்துள்ளது. போரின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கான ஆபத்து குறித்து எச்சரிப்பதாக ஈரான் கூறியுள்ளது.
இஸ்ரேலின் செயலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி குலைந்து வருவதாக எகிப்து குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேலின் இன்றைய தாக்குதலில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் நேரடியாக எந்த உதவியும் செய்யவில்லை என சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். காசாவில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் மரணமடையும் நிலையில் ஏமன் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள வான்வழி தாக்குதல் போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.