ஈராக் பேரணி புதிய தலைமுறை
உலகம்

இஸ்ரேல் - ஹமாஸ் போர்: பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஈராக், ஜோர்டான் மக்கள்.. எல்லையை கடக்க முயற்சி!

பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியில் ஈடுபட்டனர்

Prakash J

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 7வது நாளாக நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.

இதற்கிடையே, பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியில் ஈடுபட்டனர். தஹ்ரீர் (TAHRIR) சதுக்கத்தில் குவிந்த மக்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிக்க: ”நான் என்ன தவறு செய்தேன்” - பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்த கர்நாடக இளைஞர் கைது!

பேரணியில் ஈடுபட்டோர் கைகளில் ஈராக் மற்றும் பாலஸ்தீன கொடிகளை ஏந்தியிருந்தனர். மனித உரிமைகளை மீறும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் இஸ்ரேலிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதேபோல், ஈரானிலும் பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இஸ்ரேலுக்கு உதவும் வகையில் ஆயுதங்களை வழங்கிவரும் அமெரிக்காவிற்கு எதிராக பேரணியில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பாலஸ்தீனிய மக்களுக்கு உதவும் வகையில், அவர்கள் எல்லையைக் கடக்க ஈராக், ஜோர்டான் உள்ளிட்ட மக்கள் உதவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: சைவ உணவிற்குப் பதிலாக அசைவ உணவு.. டெலிவரி செய்த Zomato, McDonald-க்கு ரூ.1 லட்சம் அபராதம்!