இஸ்ரேல், ஹமாஸ் pt web
உலகம்

உயிரிழந்த 250 குழந்தைகள்; பணயக்கைதிகளான 150 இஸ்ரேலியர்கள்; மாறி மாறி குற்றம்சாட்டும் இஸ்ரேல், ஹமாஸ்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 250 பாலஸ்தீன குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பும், குழந்தைகள் உள்ளிட்ட 150 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாக வைத்துள்ளதாக இஸ்ரேலும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி உள்ளன.

PT WEB

வான்வெளி தாக்குதல்களை நடத்திவந்த இஸ்ரேல் படையினர், தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளனர். தாக்குதலை தொடங்கியது ஹாமஸ் குழுவாக இருந்தாலும் பதில் தாக்குதலை இஸ்ரேல் பல முனைகளில் இருந்து தொடுத்து வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் மோதலின் அச்சுறுத்தல் லெபனான் நாடு முழுவதிலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் போர் உச்சக்கட்டத்தை தொட்டுள்ள நிலையில், இதில் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போரில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சூழலில், குழந்தைகள் பலரும் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர்.

பாலஸ்தீனத்தை சேர்ந்த குழந்தைகள் படுகாயங்களுடன் சாலைகளில் தஞ்சமடைந்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன. தாக்குதலில் இருந்து மீளமுடியாத குழந்தைகள் பலரும் மிகுந்த அச்சத்துடன் நடுங்கியபடி பேசியது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. அவர்களுக்கு பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள், உணவு, தண்ணீர் கொடுத்து உதவி வருகின்றனர்.

இந்நிலையில், ராணுவத்தினர், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 150 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி உள்ளது.

மேலும், பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காசாவுக்கு மின்சாரம் வழங்கமாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசா நகரத்தில் இருந்த மின் உற்பத்தி நிலையத்தில் எரிபொருள் முழுவதும் தீர்ந்ததன் காரணமாக நேற்றிலிருந்து காசா நகரத்தில் மின்சாரம் இல்லாத நிலையே உள்ளது. ஐநா சார்பாக மனித உடல்களை மீட்பதும் அடிப்படை வசதிகளை செய்து தருவதுமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கிடையே, ஹமாசிடம் உள்ள பணயக்கைதிகளை மீட்பதற்கு உதவ செஞ்சிலுவை சங்கம் முன்வந்துள்ளது. பணயக்கைதிகள் மீட்கப்படும் பட்சத்தில் போரின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 250 பாலஸ்தீன குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது. காசா நகரில் குண்டுகள் வீசி நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. கட்டட இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாகவும், தோண்ட தோண்ட சடலங்கள் கிடைப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.