ஈரான் நாட்டின் தெஹ்ரான் நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் தேதி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண்ணை ஈரான் அறநெறி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாஷா அமினியை போலீசார் தாக்கியதில் அவர் கோமா நிலைக்கு சென்றார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா செப்டம்பர் 16ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து, ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். மாஷா அமினிக்கு நீதிகோரி ஈரானிய கால்பந்தாட்ட வீரர் அமீர் நாசர் அசாதனியும் இந்தப் போராட்டத்தில் குதித்தார். இதற்காக ஈரான் அரசு அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. மேலும் இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 354 பேருக்கு ஈரான் அரசு மரண தண்டனை நிறைவேற்றியிருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஈரான் விளையாட்டு வீராங்கனைகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும்போது ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், கஜகஸ்தானில் கடந்த (2022) டிசம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச செஸ் விளையாட்டுப் போட்டியில் ஈரான் செஸ் வீராங்கனை சாரா ஹதீம் ஹிஜாப் அணியாமல் பங்கேற்றார். இதனால், நாடு திரும்பிய உடன் அவரை கைதுசெய்ய ஈரான் அரசு திட்டமிட்டது.
இதையடுத்து, சாரா ஹதீம் தனது கணவர் மற்றும் 10 மாத குழந்தையுடன் ஸ்பெயின் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் குடியேறினார். அந்த சமயத்தில் பேசிய சாரா ஹதீம், “ஹிஜாப் அணிந்திருக்கும்போது நான் நானாக இல்லை. நான் நன்றாக உணருவதில்லை. ஆகையால், அந்தச் சூழ்நிலைக்கு நான் முற்றுப்புள்ளி வைக்க எண்ணினேன். இதனால், இனிமேல் ஹிஜாப் அணியப்போவதில்லை என முடிவெடுத்தேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டில் குடியேறிய சாரா ஹதீமின் சூழலைக் கருத்தில்கொண்டு சிறப்புப் பிரிவின்கீழ் அந்நாட்டு அரசு தற்போது அவருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. இதற்கான ஒப்புதலை அந்நாட்டு அமைச்சரவை நேற்று வழங்கியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.