அலி கமேனி எக்ஸ் தளம்
உலகம்

”இரத்தம் சிந்தும் லெபனான் மக்களுக்காக நிற்போம்; இஸ்ரேல் வெற்றிபெறாது” - ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி!

Prakash J

இஸ்ரேல் - காஸா இடையேயான போரில், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவ்வமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது உலக அளவில் பேசுபொருளானது. இதன்காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் அதன் தெற்கு மற்றும் வடக்கு முனைகளில் இஸ்ரேலை எதிர்த்துப் போராடும் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா ஆகிய இரண்டையும் ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஈரானின் உயர் தலைவர் அலி கமேனி தெஹ்ரானில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பொதுவெளியில் கமேனி உரையாற்றுவதை அடுத்து, அவரை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். அதில் பேசிய அவர், “சில இரவுகளுக்கு முன் நமது படைகள் மேற்கொண்ட நடவடிக்கை மிகவும் சட்டப்பூர்வமான, முறையான ஒன்று ஆகும். இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள் அவர்கள் பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மக்களுக்கு எதிராக செய்த குற்றங்களுக்கான குறைந்தபட்ச தண்டனைதான். பிரிவினை மற்றும் தேசத்துரோகத்தை விதைத்து, அனைத்து முஸ்லிம்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதே நமது எதிரியின் கொள்கைகள் ஆகும். அவர்கள் பாலஸ்தீனியர்கள், லெபனானியர்கள், எகிப்தியர்கள், ஈராக்கியர்கள், ஏமன் மற்றும் சிரிய மக்களுக்கும் எதிரிகள். நம் எதிரி ஒன்றுதான்” என்றார்.

இதையும் படிக்க: ‘இளமைக்கு போலாம் வாங்க...’ - இஸ்ரேல் Time Machine எனக்கூறி ரூ.35 கோடி மோசடி.. தலைமறைவான உ.பி. ஜோடி!

தொடர்ந்து உரையாற்றிய அவர், “சையத் ஹசன் நஸ்ரல்லா இப்போது நம்முடன் இல்லை. ஆனால் அவரது ஆன்மாவும், அவரது பாதை என்றென்றும் நம்மை ஊக்குவிக்கும். அவரது தியாகம் இந்த செல்வாக்கை மேலும் அதிகரிக்கும். நஸ்ரல்லாவின் இழப்பு வீண் போகவில்லை. நமது அசைக்க முடியாத நம்பிக்கையை வலுப்படுத்திக் கொண்டு எதிரிக்கு எதிராக நிற்க வேண்டும். இரத்தம் சிந்தும் லெபனான் மக்களுக்கு உதவுவதும், போரை ஆதரிப்பதும் அனைத்து முஸ்லிம்களின் கடமையும் பொறுப்பும் ஆகும். லெபனான் மற்றும் பாலஸ்தீனியர்கள் ஆக்கிரமிப்பை எதிர்த்து தங்களுக்கு ஆதரவாக நிற்பதற்கு கண்டித்து போராட்டம் நடத்தவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ எந்த சர்வதேச சட்டத்திற்கும் உரிமை இல்லை. அமெரிக்க ஆதரவு இருப்பது மட்டுமே சியோனிசம் தலைதூக்க ஒற்றைக் காரணம். சியோனிச ஆக்கிரமிப்பு வேரோடு பிடுங்கப்படும். அதற்கு வேர்கள் இல்லை, அது போலியான ஒன்று. ஹமாஸ் அல்லது ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் வெற்றிபெறாது” என எச்சரித்துள்ளார்.

முன்னதாக, பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இதன் எதிரொலியாக, ஈரான் உயர் தலைவரும், இஸ்லாமிய மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி உச்சபட்ச பாதுகாப்புடன் உள்நாட்டிலேயே பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பட்டதாக தெஹ்ரானின் அதிகார வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில்தான், அவர் இன்று பொதுவெளியில் தோன்றி உரையாற்றியுள்ளார்.

இதையும் படிக்க: மகளை ஷாப்பிங் அழைத்துச் சென்ற முகமது ஷமி| முன்னாள் மனைவி குற்றச்சாட்டு!