உலகம்

அமெரிக்காவுடனான உறவு முறியும் நிலையில் இருக்கிறது - ஈரான்

webteam

ஈரான் மூத்த தலைவர் காமெனி மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடை இருநாடுகளுக்கு இடையேயான ராஜாங்க உறவை முறிக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. 

ஈரான் உடனான சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதால் பதற்றம் மேலும் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் நேற்று ஈரானின் மூத்த தலைவரான அயத்துல்லா அலி காமெனி மீது பொருளாதார தடை விதித்தார். 

இந்நிலையில் இதுகுறித்து ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் செய்தி தொடர்பாளர் முகமது அப்பாஸ் மௌசாவி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ஈரானின் மூத்த தலைவரான அயத்துல்லா அலி காமெனி மீது பொருளாதார தடை விதித்தன் மூலம் அமெரிக்கா இடையேயான ராஜங்க உறவு முறியும் தருவாயில் உள்ளது. அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் இது போன்ற நடவடிக்கைகள் உலக அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை சீர்குலைக்கும் வகையில் உள்ளன” என பதிவிட்டுள்ளார். 

முன்னதாக நேற்று ஈரானின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி மீது பொருளாதார தடைக்கான ஆணையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இதன்மூலம் அயத்துல்லா அலி காமெனி அமெரிக்கா நிதி ஆதாரங்களை பயன்படுத்த முடியாது. அத்துடன் அமெரிக்காவிலுள்ள சொத்துக்களை பயன்படுத்த முடியாது. இதற்கு அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், “ஈரானின் தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு அந்த நாட்டின் மூத்த தலைவரே பொறுப்பேற்க வேண்டும். ஆகவேதான் அவர் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். ஈரான் நாட்டின் அனைத்து முக்கிய விஷயங்களிலும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அயத்துல்லா அலி காமெனியுடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.