உலகம்

பிரிட்டிஷின் எண்ணெய் கப்பலை சிறைபிடித்தது ஈரான்..!

webteam

ஹோர்முஸ் ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் நாட்டின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது. 

அமெரிக்கா- ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் ஈரான் மீது அமெரிக்கா பல பொருளாதார தடை ஆகியவற்றை விதித்தது. இந்நிலையில் ஈரான் நாட்டிற்கு அருகிலுள்ள ஹோர்முஸ் ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் நாட்டின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறைபிடித்துள்ளது. 

இது தொடர்பாக ஈரான் நாட்டின் பாதுகாப்பு அமைப்பு, “பிரிட்டிஷ் நாட்டின் இந்த கப்பல் சர்வதேச கடல் விதிகளை மீறியதாக் இதனை நாங்கள் சிறைபிடித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது. இதற்கு பிரிட்டிஷ் நாட்டின் வெளியுறவு செயலாளர் ஜேரிமி ஹண்ட்,“ கப்பல் சிறைபிடிக்கப்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. ஈரான் நாட்டின் இந்த நடவடிக்கை மிகவும் ஏற்று கொள்ளத்தக்கவகையில் இல்லை. சர்வதேச கடற் பகுதியில் அனைத்து நாடுகளின் கப்பல்களும் சுதந்திரமாக செல்ல அனுமதி உண்டு. இதை எந்த ஒரு நாடும் தடுக்கமுடியாது. 

ஈரான் நாட்டினர் எங்கள் கப்பலை சிறைபிடித்த போது எங்கள் கப்பல் சர்வதேச கடற்பகுதியில் தான் இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் ஈரான் நாட்டு அதிகாரிகளிடம் பேசிக் கொண்டு வருகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் நாடு சுட்டு வீழ்த்தியது. இதனையடுத்து அமெரிக்கா ஈரான் மீது பல பொருளாதார தடைகள் விதித்தது. இதனைத் தொடர்ந்து ஈரான் தனது நாட்டிற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் நடந்து வரும் எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்த ஆயத்தம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.