இப்ராஹிம் ரெய்சி எக்ஸ் தளம்
உலகம்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் முன்னாள் அதிபர்.. காரணம் பேஜரா? சந்தேகத்தை எழுப்பிய எம்பி!

Prakash J

காசாவில் நடைபெற்று வரும் போர் காரணமாக, லெபனான் நாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பினர், தகவல் தொடர்புக்காக கையடக்க கருவியாக பேஜர்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேஜர்களும், வாக்கி-டாக்கிகளும் வெடித்துச் சிதறின.

இதில் 39 பேர் உயிரிழந்ததாகவும், 3,000 நபர்கள் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகின. இது, இஸ்ரேலின் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. எனினும் இதை இஸ்ரேல் உறுதிப்படுத்தவும் இல்லை; அதேநேரத்தில் மறுப்பு தெரிவிக்கவும் இல்லை. இதுகுறித்து லெபனான் அரசாங்கம் தீவிரமாக விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த மே மாதம் 19ஆம் தேதி, ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் உசைன் அமீர் அப்துல்லாயன் உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். கடும் பனிசூழ்ந்த வானிலை காரணமாக விபத்து நிகழ்ந்தது என அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்தது.

இந்தச் சூழலில், ”ஈரான் முன்னாள் அதிபரான இப்ராகிம் ரெய்சியும் பேஜர் ஒன்றை பயன்படுத்தி வந்தார்” என அந்நாட்டு எம்பியான அகமது பக்ஷயேஷ் அர்தேஸ்தானி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், ”ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி, பேஜர் ஒன்றைப் பயன்படுத்தினார். அவர் பயன்படுத்திய பேஜரின் வகை ஹிஸ்புல்லா படைகளிடம் இருந்து வேறுபட்டதாக இருக்கலாம். இருப்பினும், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான சாத்தியமான காட்சிகளில் ஒன்று, அவரது பேஜர் வெடித்திருக்கலாம். பேஜர்களை வாங்குவதில் ஈரான் பங்கு வகித்துள்ளது. ஈரானியப் படைகள் நிச்சயமாக ஹிஸ்புல்லாக்கள் பேஜர்களை வாங்குவதில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. எனவே, எங்கள் சொந்த புலனாய்வு அமைப்புகளும் இந்த விஷயத்தை விசாரிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

லெபனானில் பேஜர் விபத்துக்குப் பிறகு, மறைந்த இப்ராகிம் ரெய்சி பயன்படுத்தியதாகக் கூறப்படும் பேஜருடன் அவர் இருக்கும் படம் இணையத்தில் பரப்பப்படுகிறது. ஆனால் அது, ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் அதேவகை பேஜரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.