இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன்கள் மற்றும் நீண்ட தூர தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் தொடங்கியுள்ளது.
சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகத்தின் மீது கடந்த ஒன்றாம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஈரானின் இரண்டு ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை இஸ்ரேலே நடத்தியதாக குற்றம்சாட்டிய ஈரான் உரிய பதிலடி அளிக்கப்படும் என சூளுரைத்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக வெடிகுண்டுகளை சுமந்துகொண்டு 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஈரான் ஏவியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.மேலும், இஸ்ரேல் ராணுவத்தின் ரேடார் , ஜி.பி.எஸ் உள்ளிட்டவை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தீடீர் தாக்குதல் காரணமாக இஸ்ரேலின் பல நகரங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
ட்ரோன்கள் மட்டும் அல்லாமல் அதிக சேதத்தை விளைவிக்கக்கூடிய ஏவுகணைகளையும் ஈரான் ஏவியிருப்பதாக அந்நாடு கூறியுள்ளது. அந்த பகுதியில் அதிக படைப்பிரிவுகளை நிலைகொள்ளச் செய்துள்ள அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தேவையான உதவிகள் செய்யபடும் என அறிவித்துள்ளது.
ட்ரோன்கள் இஸ்ரேலை சென்றடைய பல மணி நேரம் ஆகும் என தெரிவித்துள்ள இஸ்ரேல், எந்த தாக்குதலையும் சமாளிக்கும் ஆற்றல் இருப்பதாக கூறியுள்ளது.
மேலும்,இது குறித்து இஸ்ரேல் பிரதமர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், “நாங்கள் ஒரு தெளிவான கோட்பாட்டை தீர்மானித்துள்ளோம்: யார் எங்களுக்கு தீங்கு விளைவிக்கிறார்களோ அவர்களுக்கு நாங்கள் தீங்கு விளைவிப்போம். மேலும், எந்தவொரு அச்சுறுத்தலில் இருந்தும் எங்களை பாதுகாத்துக்கொள்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிரியா, லெபனான் எல்லையில் அமைந்துள்ள கோலன் ஹெய்ட்ஸ், மற்றும் தெற்கு பகுதியில் உள்ள நெவடிம்ம் டிமோனா மற்றும் செங்கடல் பகுதியிலமைந்துள்ள எய்லாட் ஆகிய பகுதிகளில் வசிபவர்கள் பாதுகாப்பான இடங்களிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தனது வான்பரப்பு முழுவதையும் மூடியுள்ள இஸ்ரேல் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது. அமெரிக்காவில் தனது கடற்கரை இல்லத்திற்கு மேற்கொண்டிருந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவசரமாக வெள்ளை மாளிகை திரும்பினார்.
இந்நிலையில், துபாயில் இருந்து இந்தியா நோக்கி போர்ச்சுகலைச் சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்று வந்துகொண்டிருந்தது.
இது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபருக்கு தொடர்புடைய கப்பல் என கூறப்படுகிறது. ஹார்மஸ் ஜலசந்தியில் வந்தபோது, நடுக்கடலில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய ஈரானிய ராணுவப் படையினர் துபாயில் இருந்து இந்தியா வந்துகொண்டிருந்த இக்கப்பலை சிறைபிடித்ததுள்ளனர். இதில் 17 இந்தியர்கள் உட்பட 25 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.