இஸ்ரேல்-லெபனான் போர் எக்ஸ் தளம்
உலகம்

போர் சூழல் | இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி ஈரான் தாக்குதல்.. களத்தில் குதித்த அமெரிக்கா!

Prakash J

இஸ்ரேன் - ஈரான் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் போர் பதற்ற சூழல் உச்சநிலை அடைந்துள்ளது.

இஸ்ரேல் - காஸா இடையேயான போரில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்கள், இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரேல்- லெபனான் இடையே சமீபகாலமாக நடைபெற்று வரும் போரில், இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 3,000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இஸ்ரேல் லெபனானில் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேலையொட்டிய லெபனான் எல்லைப் பகுதிகளில், சண்டை தீவிரமடைந்துள்ளது. முன்னதாக, எல்லையோரங்களில் உள்ள லெபனான் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டிருந்தது. தெற்கு லெபனானுக்குள் தரைவழியாக இஸ்ரேல் ராணுவம் அனுப்பப்பட்ட சில மணிநேரங்களுக்கு பின்பு அந்த உத்தரவு வெளியானது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தற்போது, இஸ்ரேல் லெபனானில் தரைவழி தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து துல்லிய தாக்குதலை நடத்தியதை இஸ்ரேலிய ராணுவம் உறுதி செய்துள்ளது ஆனால், இதை ஹிஸ்புல்லா அமைப்பு மறுத்துள்ளது.

இதையும் படிக்க:”அவரை திருத்துவதற்கு வாய்ப்பில்லை..”|தாயைக் கொன்று உடலை வறுத்து சாப்பிட்ட கொடூர மகனுக்கு மரண தண்டனை

அதேநேரத்தில், இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா தெரிவித்தது.

இந்தச் சூழலில் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. தவிர, இஸ்ரேல் மீது ஈரான் இன்னும் சில மணி நேரங்களில் ஏவுகணை தாக்குதல்களை நடத்த இருப்பதாக அமெரிக்கா தெளிவாக எச்சரிக்கை விடுத்தது. மேலும், ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணை ஏவப்பட்டால் கடும் பின்விளைவுகளுக்கு வழிவகுக்கும் என இஸ்ரேல் கூறியது. போர்ப் பதற்றம் காரணமாக, இஸ்ரேலில் உள்ள தனது ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியது.

முன்னதாக, இஸ்ரேலிடம் அமெரிக்கா ஆலோசனை நடத்தியபின்பு, தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் மீது நேரடி தாக்குதலை தொடங்கியது ஈரான். இவ்வளவு நாட்களாக இஸ்ரேலுக்கும் போராளி அமைப்புகளுக்கும் இடையே நடைபெற்ற போர் தற்போது இஸ்ரேல் மற்றும் ஈரான் என்கிற இரண்டு தனிப்பட்ட நாடுகளுக்கு இடையே விரிவடைந்துள்ளது. இந்த தாக்குதல்களால் உச்சகட்ட பதற்றத்தில் மத்திய கிழக்கு ஆசியா உள்ளது. இஸ்ரேல், லெபனான், சிரியா வழியாக செல்லும் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அயான் டோம் எனும் பாதுகாப்பு அமைப்பை தாண்டி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் முழுவதும் 1,864 அலாரங்கள் ஒலித்து வருகின்றன.

பின்னர் மீண்டும் ஈரானில் இருந்து ஒரு இரண்டாவது அலை பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது பாய தொடங்கியது. ஈரான் ஏற்கனவே 400 ஏவுகணைகளை அனுப்பியுள்ளது, இப்போது குறைந்தது 100 ஏவுகணைகள் பதிவாகியுள்ளன.

ஈரான் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவத்திற்கு பைடன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகவும், அதற்கான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: உடலுறவுக்குப் பின் வெளியேறிய ரத்தப்போக்கு.. இணையத்தில் தகவல் தேடிய காதலர்.. காதலிக்கு நேர்ந்த சோகம்!