உலகம்

தூக்கிலிடப்பட்ட பத்திரிகையாளர்... ஈரானுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பலை!

தூக்கிலிடப்பட்ட பத்திரிகையாளர்... ஈரானுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பலை!

PTuser

ஈரானில் பத்திரிகையாளரும், மதகுருவின் மகனுமான ரூஹுல்லாவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஈரானுக்கு எதிரான எதிர்ப்பலை அதிகரித்துள்ளது.

ஈரானின் சீர்திருத்தவாத இஸ்லாமிய மதகுரு இமாம் முகமது அலி ஜாமின் மகன் ரூஹுல்லா ஜாம். செய்தியாளரான இவர் அமாத் நியூஸ் என்கிற பெயரில் செய்தி வலைதளம் ஒன்றை நடத்திவந்தார். பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்தத் தளத்தை பின்தொடர்ந்து வந்த நிலையில், 2017, 2018 காலகட்டத்தில் இவர் தனது வலைதளம் மூலம், அரசுக்கு எதிராக போராட்டங்களை தூண்டிவிட்டதாக ஈரான் அரசு குற்றம் சுமத்தியது. மேலும், அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் போராட்டக்காரர்களை அரசு ஒடுக்கும் ஆவணங்களையும் தனது வலைதளத்தில் வெளியிட்டார் என்றும் அரசு சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

முன்னதாக, ரூஹுல்லாவுக்கு பிரான்ஸ் அரசு தஞ்சம் அளிக்க முன்வந்து ஒப்புதல் கொடுத்தது. அதன்படி, அவர் பிரான்ஸ் தப்ப இருந்த நிலையில் ஈராக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ரூஹுல்லாவுக்கு அந்நாட்டுச் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்படி, சனிக்கிழமை  அவர் தூக்கிலிடப்பட்டார். இதற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரூஹுல்லாவிடம் கட்டாயப்படுத்தப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் ஈரான் அரசு வாங்கியதாகவும், அதன் அடிப்படையில் நியாயமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு தற்போது அவர் தூக்கிலிடப்பட்டுள்ளார் என்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

இதேபோல், ரூஹுல்லா தூக்கிலிடப்பட்டது ஈரான் அரசின் காட்டுமிராண்டித்தனம் எனக் கூறி பிரான்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறியுள்ள பிரான்ஸ், ஈரான் நிறைவேற்றவேண்டிய சர்வதேச கடமைகளுக்கு எதிராக ரூஹுல்லா தூக்கிலிடப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளது. பிரான்ஸ் மட்டுமல்ல, ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஈரானுக்கு இந்த விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கண்டனத்தோடு நில்லாமல், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று முதல் நடைபெற இருந்த இணையவழி வர்த்தக சம்மேளனம் ஒன்றிலிருந்து இந்த நான்கு ஐரோப்பிய நாடுகளும் அதிரடியாக வெளியேறியுள்ளன. ஆனால், ஈரான் அரசு இந்த ஐரோப்பிய நாடுகளின் தூதர்களை அழைத்து கூட்டத்தை புறக்கணித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஈரான் - ஐரோப்பிய நாடுகள் இடையேயான இந்த திடீர் மோதல் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.