israel - palastine war file image
உலகம்

சர்வதேச வர்த்தகமே முடங்கும் அபாயம்.. எகிப்தை தாக்கிய இஸ்ரேல்.. நடந்தது என்ன?

இஸ்ரேல் பாலஸ்தீன் இடையேயான போர் உச்சமடைந்து வரும் நிலையில், எதிர்பாராத விதமாக இஸ்ரேலின் குண்டுகள் எகிப்தில் விழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சர்வதேச வர்த்தகத்தையே முடக்கும் அளவுக்கு அபாயத்தை ஏற்பட்டுள்ளது.

யுவபுருஷ்

ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்னையில் இஸ்ரேல் - காஸா இடையே போர் நீடித்து வருகிறது. இதனால் இருநாடுகளுக்கு இடையே உயிர்பலிகள் அதிகரித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. தங்களோடும், எகிப்து நாட்டோடும் எல்லையை பகிர்ந்துகொள்ளும் காஸா மீது கோர தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வரும் நிலையில், அதன் பீரங்கி குண்டுகள் எகிப்தை பதம்பார்த்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச வர்த்தகத்தின் அடிநாதமாக இருந்துவரும் சூயஸ் கால்வாய் எகிப்து நாட்டில்தான் அமைந்துள்ளது. உலக வர்த்தகத்தில் சுமார் 12 சதவீதம் இந்த கால்வாய் மூலமே நடக்கிறது. இந்நிலையில், இஸ்ரேல் - காஸா இடையே நடந்துவரும் பஞ்சாயத்தில் எகிப்து உள்ளே வந்து சூயஸ் கால்வாய் மூலம் நடைபெறும் வர்த்தகம் பாதிக்கப்பட்டால், உலக அளவில் வர்த்தகம் பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில், இந்த தாக்குதல் எதிர்பாராதவிதமாகவே நடந்தது என்று இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது. கெரெம் ஷாலோம் பகுதியின் எல்லையை ஒட்டிய எகிப்திய போஸ்ட் மீது இஸ்ரேலைச் சேர்ந்த பீரங்கி எதிர்பாராதவிதமாக தாக்கியுள்ளது. இதற்கு இஸ்ரேல் வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளது. இதற்கு பதில் தெரிவித்த எகிப்து ராணுவ செய்தி தொடர்பாளர், “இந்த தாக்குதலால் எங்கள் நாட்டின் பாதுகாப்பு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு அவ்வப்போது இஸ்ரேலை தாக்கி வரும் நிலையில், பாலஸ்தீன அபிமானி நாடான எகிப்து இந்த போரில் களமிறங்கினால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் சண்டை ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.