உலகம்

குல்பூஷன் ஜாதவ் வழக்கு: ஜூலை 17-ல் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

குல்பூஷன் ஜாதவ் வழக்கு: ஜூலை 17-ல் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

webteam

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வேதச நீதிமன்றம் வரும் 17-ஆம் தேதி தீர்ப்பு அளிக்கவுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் உளவு பார்த்தாக கூறி கடந்த 2016-ஆம் ஆண்டு முன்னாள் இந்திய கப்பல்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கும்படி, இந்தியா பாகிஸ்தானிடம் வலியுறுத்தியது. எனினும் பாகிஸ்தான் அதற்கு அனுமதி மறுத்தது. 

இதனையடுத்து உளவு பார்த்தது மற்றும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக கூறி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குல்பூஷன் ஜாதவிற்கு மரண தண்டனை விதித்தது. இதனைத்தொடர்ந்து குல்பூஷன் மீதான விசாரணையில், வியன்னா நெறிமுறைகளை பாகிஸ்தான் பின்பற்றவில்லை எனக் கூறி இந்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. 

இந்த வழக்கை விசாரித்து வந்த சர்வதேச நீதிமன்றம், வழக்கு முடியும் வரை குல்பூஷன் ஜாதவ் மீதான மரண தண்டனைக்கு தடை விதித்திருந்தது. இந்த வருடம் பிப்ரவரி மாதம் இந்த வழக்கின் விசாரணையும் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 17-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக சர்வேதச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூலை 17-ஆம் தேதி மாலை 3 மணிக்கு(இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு) நீதிபதி அப்துல்காவி அகமது யூசஃப் இந்த வழக்கின் தீர்ப்பை அளிப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.