உலகம்

ஜோ பைடனின் மனைவி பெறப்போகும் வரலாற்றுப் பெருமைகள்!

ஜோ பைடனின் மனைவி பெறப்போகும் வரலாற்றுப் பெருமைகள்!

Sinekadhara

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் வரலாற்று பெருமைகளைப் பெறும் அமெரிக்காவின் முதன் பெண்மணி ஆவார்.

மனைவிமார்கள் தங்களது கணவர்களை ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பார்கள். ஜில் பைடனும் அப்படிப்பட்ட பெண்மணிகளில் ஒருவர்தான். சில தருணங்களில் சீக்ரெட் ஏஜெண்டைப் போல, அசம்பாவிதங்களில் இருந்து ஜோ பைடனைக் காப்பாற்றியவர் ஜில் பைடன். அமெரிக்க மக்கள் இதுபோன்ற காட்சிகளை பலமுறை கண்டிருக்கிறார்கள்.

ஜில் பைடன், ஜோ பைடனின் இரண்டாவது மனைவி. தனது காதல் மனைவியும் மகளும் விபத்தில் மரணமடைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு 1978-ஆம் ஆண்டில் ஜில் பைடனை ஜோ பைடன் திருமணம் செய்து கொண்டார். வாழ்க்கையை மீட்டுக் கொடுத்தவர் ஜில் என்று ஜோ பைடன் பலமுறை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார். தாயை இழந்த இரு மகன்களையும் அன்புகாட்டி வளர்த்த விதம் குறித்தும் ஜோ பைடன் உணர்ச்சி பொங்கக் கூறியிருக்கிறார்.

ஜில் பைடனின் இயற்பெயர் ஜில் டிரேசி ஜேக்கப்ஸ். இத்தாலிய-அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். இத்தாலிய பாரம்பரியத்தில் இருந்து முதல் பெண்மணியாகப் போகும் முதல் நபர் என்ற பெருமை அவருக்குக் கிடைக்கப் போகிறது. ஜில் பைடன் ஒரு கல்லூரிப் பேராசிரியரும்கூட. வெள்ளை மாளிகையில் குடியேறிய பிறகும் பேராசிரியர் பணியைத் தொடரப் போவதாக அறிவித்திருக்கிறார். அப்படிச் செய்தால், அமெரிக்க வரலாற்றிலேயே வேலை செய்யும் முதலாவது முதல் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையும், ஜில் பைடனுக்குச் சொந்தமாகும். இவை மட்டுமல்ல, ஆங்கிலம், வாசிப்பு ஆகிய இரு துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்கும் ஜில் பைடன், முதல் பெண்மணிகளிலேயே அதிகம் படித்தவர் என்ற பெருமையையும் பெறப் போகிறார்.

குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஜோ பைடனின் பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில் ஜில் பைடன் இருந்திருக்கிறார். 1988-ஆம் ஆண்டு முதல் அதிபர் பதவியை நோக்கிய ஜோ பைடனின் பயணத்தில் ஜில் பைடனின் பங்கு கணிசமானது. அதிபர் தேர்தல் பரப்புரைகளிலும் களைப்பில்லாமல் பணியாற்றியிருக்கிறார் ஜில் பைடன். தற்போது அமெரிக்க அதிபராகிவிட்டார் ஜோ பைடன். இதுவரை ஜில் பைடன் செய்த பாதுகாப்புப் பணியை உண்மையான சீக்ரெட் ஏஜென்டுகள் கைப்பற்றப்போகிறார்கள் என்று வேடிக்கையாகப் பேசுகிறார்கள் அமெரிக்க மக்கள்.