இன்டெல் எக்ஸ் தளம்
உலகம்

நடப்பாண்டில் நஷ்டத்தைச் சந்தித்த INTEL... 18 ஆயிரம் பேரை வேலையிலிருந்து நீக்க முடிவு!

உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெலும் 18,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு பொருளாதாரம் உலக அளவில் மந்தநிலையைச் சந்தித்தது. இதன் காரணமாக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் வரிசையாக பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டன.

குறிப்பாக மெட்டா, ட்விட்டர், அமேசான், மைக்ரோசாப்ஃட், டிஸ்னி, கூகுள் ஆகிய நிறுவனங்கள் தனது பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியது. இதைத்தொடர்ந்து இந்தியாவிலும் சில ஐடி நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை அதிரடியாகப் பணி நீக்கம் செய்ய ஆரம்பித்தன.

கடந்த ஆண்டு இறுதிவரை உலகளவில் பிரபல நிறுவனங்களில் இருந்து பல்லாயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டு தொடக்கத்தில் அது வெகுவாகக் குறைந்தது. ஆனாலும், ஒருசில நிறுவனங்களில் குறைந்த எண்ணிக்கையில் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெலும் 18,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: போலிச் சான்றிதழ் விவகாரம்: முன்ஜாமீன் நிராகரிப்பு.. வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற பூஜா கேட்கர்!

உலகில் சிப் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது இன்டெல். இந்த நிறுவனத்திற்கு எதிராகச் சில போட்டி நிறுவனங்கள் வந்தாலும் வணிகச் சந்தையில் இது, தனித்தே இயங்கி வருகிறது. அதேநேரத்தில், ஏஐ சிப்களுக்கான சந்தையில் இன்டெல் பின்தங்கி இருப்பதால் நடப்பு ஆண்டில் இதுவரை அதன் பங்குகள் 40 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.

இதனால், நடப்பு காலாண்டில் சுமார் ஒன்றரை பில்லியன் டாலர் அளவுக்கு அந்த நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக அந்த நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்படி, அந்த நிறுவனத்தின் மொத்தமுள்ள பணியாளர்களில் 15 சதவிதத்தைக் குறைக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதாவது, 18,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த வாரத்தில் பணியாளர்களின் பணி நீக்க நடவடிக்கை தொடங்கும் என்றும் பெரும்பாலான பணிநீக்கங்கள் இந்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நடப்பாண்டில் இன்டெல் நிறுவனம், ரூ. 83,000 கோடி (10 பில்லியன் டாலர்) மதிப்பிலான செலவைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலில் உள்ள சிப் தயாரிப்பு ஆலையை விரிவுபடுத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இன்டெல் அறிவித்துள்ளது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம், இன்டெல் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: எல்லையில் சீனா கட்டிய பாலம்! வாகனங்கள் செல்வதை படம்பிடித்த செயற்கைக்கோள்.. இந்தியாவுக்கு சிக்கல்?