ஏர்பஸ் விமானம் ட்விட்டர்
உலகம்

2 விமானிகளும் நடுவானில் அரைமணி நேரம் தூக்கம்.. திசை மாறிச் சென்ற விமானம்.. பதறிய அதிகாரிகள்!

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் இரண்டு விமானிகளும் அரை மணி நேரம் தூங்கிய சம்பவம் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Prakash J

சமீபகாலமாக விமானத்தில் பயணம்செய்யும் பயணிகளுக்கு, அவ்விமானச் சேவைகளில் அதிருப்தி நிலவுவதாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. மறுபுறம், விமான பயணிகள் நடுவழியில் எமெர்ஜென்சி கதவைத் திறக்க முயல்வது, குடிபோதையில் ரகளை செய்வது, சிறுநீர் கழிப்பது எனப் பல நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் இரண்டு விமானிகளும் அரை மணி நேரம் தூங்கிய சம்பவம் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தோனாஷியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சுலவேசி நகரில் இருந்து தலைநகர் ஜகர்தாவுக்கு, கடந்த ஜனவரி 25ஆம் தேதி பாடிக் ஏர்பிளைட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் 320 என்ற விமானம் 153 பயணிகளுடன் சென்றது.இந்த விமானத்தில் 2 விமானிகளும், 4 விமானப் பணியாளர்களும் இருந்தனர்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தனது வழக்கமான பாதையைவிட்டு விலகிச் சென்றது. இதனால், விமானக் கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரிகள் விமானிகள் இருவரையும் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. சுமார் 35 நிமிடங்கள் இந்த பரபரப்பு நீடித்திருக்கிறது. அதன்பிறகே விமானம் வழக்கமான பாதைக்கு வந்து தனது பயணத்தைத் தொடங்கியது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இரண்டு விமானிகளும் தூங்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிக்க: ஒரே மாதிரி உருவம்: எதேச்சையாக சந்தித்துக்கொண்ட இருவர்.. குழம்பிய விமானப் பணியாளர்கள்!

அந்த விமானத்தில் 32 மற்றும் 28 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண் விமானிகள் இருந்துள்ளனர். விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் உதவி விமானியிடம் கமாண்ட் விமானி, ’தனக்கு தூக்கம் அதிகமாக வருகிறது’ என அவரைப் பார்க்கச் சொல்லிவிட்டு இவர் தூங்கியிருக்கிறார். ஆனால், சிறிது நேரத்தில் உதவி விமானியும் தன்னை அறியாமல் தூங்கிவிட்டார். இதனால் விமானிகளிடம் இருந்து 12 நிமிடத்திற்கு மேலாக எந்த தகவல் பரிமாற்றமும் இல்லை. இதனால் பயந்துபோன ஜகர்தாவில் உள்ள விமானக் கட்டுப்பாட்டு விமான நிலைய அதிகாரிகள் விமானிகளைத் தொடர்புகொள்ள தொடர்ந்து முயற்சித்துள்ளனர். பின்னர் கிட்டத்தட்ட 28 நிமிடங்களுக்குப் பிறகு உதவி விமானி தூக்கத்தில் இருந்து எழுந்து இருக்கிறார். அப்போதுதான் விமானம் தவறான பாதையில் செல்வதை உணர்ந்துள்ளார். அதன்பிறகு விமானத்தைச் சரியான திசையில் செலுத்தியுள்ளார். எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. மேலும், விமானமும் சரியான நேரத்தில் வந்து தரையிறங்கியுள்ளது.

எனினும், விமானிகளின் இந்த அஜாக்கிரதையான செயல் விமானப் பயணிகளின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தோனேசிய விமானப் போக்குவரத்து துறையின் பொது இயக்குநர் மரியா கிறிஸ்டி என்நாத் முர்னி இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, "பாடிக் ஏர் விமானத்தின் விமானிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்குரியது. ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் விமானிகளுக்கு ஓய்வுநேரம் கொடுப்பதிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.