சமீபத்திய புள்ளி விவரங்களின் படி, கடந்த 4 ஆண்டுகளில் 20,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் புகலிடம் கோரியுள்ளனர். இதில் அதிகம் ஆண்கள் என தெரியவந்துள்ளது.
கலிபோர்னியாவை சேர்ந்த வட அமெரிக்க பஞ்சாபி அசோசியேஷன், பஞ்சாபில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மத்தியில் வேலை செய்து வருகிறது. வட அமெரிக்க பஞ்சாபி அசோசியேஷனுக்கான உள்நாட்டுப் பாதுகாப்பு அமெரிக்க துறையால் வழங்கப்பட்ட தகவல்களின்படி ஜூலை வரை, 7 ஆயிரத்து 214 இந்தியர்கள் அமெரிக்காவில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 296 பேர் பெண்கள் என தெரிய வந்துள்ளது.
மேலும் 2014 ஆம் ஆண்டில், 2 ஆயிரத்து 306 இந்தியர்கள் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதில் 146 பேர் பெண்கள் எனவும் அதில் ஒருவருடைய பாலினம் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டில், 2 ஆயிரத்து 971 இந்தியர்கள் அமெரிக்காவில் புகலிடம் தேடி விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்களில் 96 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில், 123 பெண்கள் உட்பட 4 ஆயிரத்து 88 இந்தியர்கள் அமெரிக்காவில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். 2015 ஆம் ஆண்டிலும் 2016 ஆம் ஆண்டிலும் ஒருவருடைய பாலினம் குறித்து அறியப்படவில்லை.
2017 ஆம் ஆண்டில் 187 பெண்கள் உட்பட 3 ஆயிரத்து 656 இந்தியர்கள் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்பு அமெரிக்க துறை தெரிவித்துள்ளது.
வட அமெரிக்க பஞ்சாபி அசோசியேஷன் நிர்வாக இயக்குநர் சத்னம் சிங் சகால் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் தஞ்சம் கோரும் இந்தியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் ஒவ்வொரு வருடமும் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குறிப்பாக பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் வெளிநாட்டில் குடியேற முயற்சிப்பதாகவும் இதற்காக ஏஜெண்டுகளுக்கு ரூ. 25 லட்சத்தில் இருந்து ரூ. 30 லட்சம் வரை செலவு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.