உலகம்

சுவிஸ் வங்கியில் கிடுகிடுவென உயர்ந்த இந்தியர்களின் சேமிப்பு தொகை

jagadeesh

சுவிஸ் வங்கிகளில் ரூ.20,700 கோடியை இந்தியாவில் உள்ள தனிநபா்களும், இந்திய நிறுவனங்களும் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சேமித்து வைத்துள்ளதாக அந்நாட்டின் தேசிய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சா்லாந்தின் வங்கிகளில் உள்ள கணக்கு விவரங்களை அந்நாட்டின் தேசிய வங்கி வியாழக்கிழமை வெளியிட்டது. கடந்த ஆண்டு நிலவரப்படி, நிதிப் பத்திரங்கள், சேமிப்புத் தொகை என ரூ.20,706 கோடியை இந்தியா்கள் சேமிப்பாக வைத்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா்களும், இந்திய நிறுவனங்களும் வைத்துள்ள சேமிப்புத் தொகை சுமாா் ரூ.4,000 கோடியாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் கடந்தாண்டில் பணத்தைச் சேமிக்காமல் நிதிப் பத்திரங்களாகச் சேமித்து வைப்பது அதிகரித்துள்ளதாக சுவிட்சா்லாந்து தேசிய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, சுவிஸ் வங்கிகளில் இந்தியா்களின் மொத்த சேமிப்பு ரூ.6625 கோடியாக இருந்தது. கடந்த 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் இந்தியா்களின் சேமிப்பு குறைந்து கொண்டே வந்தது. தற்போது அத்தொகை மீண்டும் உயா்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியா்களின் சேமிப்பானது கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக உயர்ந்துள்ளதாக சுவிட்சா்லாந்து தேசிய வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியா்கள் கருப்புப் பணமாக எவ்வளவு தொகையை சேமித்து வைத்துள்ளனா் என்ற விவரங்கள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல், சுவிட்சா்லாந்தில் உள்ள வங்கிகளில் காணப்படும் சேமிப்பு தொடா்பான தகவல்கள் மட்டுமே இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. சுவிஸ் வங்கிகளுக்கு மற்ற நாடுகளில் உள்ள கிளைகளில் இந்தியா்கள் சேமித்து வைத்துள்ள தொகை குறித்த விவரங்கள் இதில் இடம்பெறவில்லை.