குற்றம் PT
உலகம்

தொடரும் சோகம் | அமெரிக்காவில் இந்திய பெண் சுட்டுக்கொலை.. இந்தியரே அரங்கேற்றிய கொடூரம்!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்தியராலேயே சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புகூட, இந்திய வம்சாவளி ஒருவரின் நகைக்கடையில் முகமூடி அணிந்த 20 மர்மநபர்கள் பட்டப்பகலிலேயே கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்தியராலேயே சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் கார்டெரெட் பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்வீர் கவுர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவரது வீட்டிற்கு உறவுக்கார பெண் ககன்தீப் கவுர், கடந்த ஜூன் 12ஆம் தேதி, சென்றிருந்தார். அப்போது, 19 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர், ககன்தீப் கவுரை வீட்டிற்கு வெளியே சந்தித்து பேசி உள்ளார். சிறிது நேரத்தில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ககன்தீப் கவுர், உதவிக்கு ஜஸ்வீர் கவுரை அழைத்துள்ளார். அவர் வந்து பிரச்னையில் தலையிட்டு ககன்தீப் கவுருக்கு ஆதரவாக பேசி உள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஜஸ்வீர் கவுரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். ககன்தீப் கவுரையும் சுட்டுள்ளார்.

இதையும் படிக்க: WI vs AFG | ஒரே ஓவரில் 36 ரன்கள்! ஆப்கானை அலறவிட்டு 4 சாதனை பட்டியலில் இடம்பிடித்த நிக்கோலஸ் பூரன்!

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஜஸ்வீர் கவுர் உயிரிழந்தார். ககன்தீப் கவுருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதல் நடத்திவிட்டு, தப்பியோடிய அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், வாஷிங்டனின் கென்ட் நகரில் வசித்து வரும் கவுரவ் கில் என்பதும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், ககன்தீப் கவுருக்கும் கவுரவ் கில்லுக்கும் என்ன தொடர்பு? அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: நீட் தேர்வு|குவியும் முறைகேடு புகார்கள்; விசாரணையில் வெளிவரும் புது தகவல்கள்.. அமைச்சர் சொன்ன பதில்!