சவுதி அரேபியாவில் பாலியல் தொல்லை அனுபவித்த ஐதராபாத்தை சேர்ந்த பெண், இந்தியா திரும்பினார்.
ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஹுமேரா பேகம். குடும்ப வறுமை காரணமாக சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு செல்ல தீர்மானித்தார். அங்கு புனித பயணம் மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்து தருகிறோம் என ஏஜெண்ட் கூறிய ஆசை வார்த்தையையும் நம்பி அவர் அங்கு சென்றார்.
ரியாத்துக்கு சென்ற அவரை, அங்கு ஒரு பணக்காரரின் வீட்டில் வேலைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு பாலியல் தொல்லை உட்பட பல்வேறு கொடுமைகள் நடந்தது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அவர், தனது சகோதரியிடம் விஷயத்தை சொல்லி, தன்னை காப்பாற்றும்படி கூறினார். அவர் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து பேகம் இந்தியா திரும்ப அமைச்சர் நடவடிக்கை எடுத்தார். அதன்படி இன்று ஐதராபாத் திரும்பினார் பேகம்.
இதுபற்றி பேகம் கூறும்போது, ‘அங்கு பல்வேறு தொல்லைகளை அனுபவித்துவிட்டேன். எனக்கு சாப்பாடு கூட தர மறுத்துவிட்டார்கள். என்னை அடித்து துன்புறுத்தினர். எனது சகோதரியிடம் போனில் பேச கூட அனுமதிக்கவில்லை. என்னை போல 15-க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு எப்படி வெளியேறுவது என்று தெரியவில்லை. நான் இப்போது இந்தியா திரும்பியதில் மகிழ்ச்சி. இதற்கு உதவி செய்த இந்திய தூதரகத்துக்கு நன்றி’ என்றார்.