ஆன்லைனில் வாங்கிய லாட்டரியில் ரூ.23 கோடி பரிசு விழுந்ததை அடுத்து, ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார் கர்நாடக இளைஞர் ஒருவர்.
கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் முகமது பயஸ் (24). மும்பையில் பணியாற்றி வரும் இவர், ஆன்லைனில், அபுதாபியில் நடக்கும் பிக் டிக்கெட் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த லாட்டரிக்கு 12 மில்லியன் திர்ஹம் பரிசு விழுந்தது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.23 கோடி.
இதுபற்றி பயஸ் கூறும்போது, ‘இதை எதிர்பார்க்கவில்லை. கடந்த சில மாதங்களாக நண்பர்களுடன் இந்த சீட்டை வாங்கி வந்தேன். இப்போது பரிசு விழுந்திருக்கிறது. எனது பெற்றோர்கள் கிட்னி பிரச்னை காரணமாக இறந்துவிட்டார்கள். இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரர் உள்ளனர். ஒரு சகோதரிக்கு திருமணம் முடிந்துவிட்டது. ஒரு சகோதரி படித்து வருகிறார்.
இவர்களுக்கு இந்தப் பணத்தை கொண்டு உதவவேண்டும். விற்ற நிலத்தை வாங்க வேண்டும். நான் ஒரு முறை கூட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றதில்லை. இந்த பரிசு தொகைக்கான காசோலையை வாங்குவதற்காக முதன்முறையாக அங்கு செல்ல இருக்கிறேன்’ என்கிறார் பயஸ்.
பரிசு விழுந்திருக்கிறது என்பதை தெரிவிக்க அவருக்கு நான்குமுறை போன் வந்தும் அவர் எடுக்கவில்லை. ஐந்தாவது முறை வந்தபோது தகவலை கேட்டதும் அவரால் நம்பமுடியவில்லை. ஆன்லைனில் நம்பரை சோதித்த பின்னரே அவர் உறுதிப்படுத்திக் கொண்டார்.