சமீபகாலமாக அமெரிக்காவில் இந்தியர்களின் மரணம் அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ரமண பித்தலா. இவர் அமெரிக்காவின் இந்தியானா பல்கலைக்கழகம் - பர்டியூ பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். வரும் மே மாதத்துடன் அவரது பட்டப்படிப்பு நிறைவுற இருக்கும் நிலையில், புளோரிடா பகுதியில் தண்ணீர் ஸ்கூட்டர் எனப்படும் ஜெட் ஸ்கை (jet sky) ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு பித்தலா சென்றுள்ளார்.
இந்தச் சூழலில், இதே வகை நீர் ஸ்கூட்டரை வாடகைக்கு எடுத்த தெற்கு புளோரிடா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனும் அந்த பகுதியில் பயணித்துள்ளான்.
அப்போது இந்த இரண்டு பேரின் வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதில் பித்தலா உயிரிழந்துவிட்டதாகவும், சிறுவன் காயமின்றி தப்பிவிட்டதாகவும் புளோரிடா மீன் மற்றும் வனவாழ் பாதுகாப்பு ஆணையம் அறிக்கை வழியாக தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 9ஆம் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில் இதுவரை கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், பித்தலாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக நிதி திரட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.