உலகம்

ஆண் காதலருக்காக, மனைவியை கொடூரமாகக் கொன்ற இந்தியர்!

ஆண் காதலருக்காக, மனைவியை கொடூரமாகக் கொன்ற இந்தியர்!

webteam

தனது ஆண் காதலருடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக, இளம் மனைவியை கொடூரமாகக் கொன்ற இந்திய கணவரின் குற்றத்தை இங்கிலாந்து நீதிமன்றம் உறுதி செய்தது.

இங்கிலாந்தில் உள்ள மிடில்ஸ்ப்ரோ பகுதியைச் சேர்ந்தவர் மிடேஷ் படேல். இவரது மனைவி ஜெசிகா படேல். இருவரும் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் படித்தபோது காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஜெசிகா தனது கணவருடன் வீட்டின் அருகில், ரோமன் ரோடு பார்மசஸி என்ற மருந்து கடையை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.

இவர்கள் இந்தப் பகுதியில் பிரபலமானவர்களாக இருந்துள்ளனர். பார்மஸிக்கு அருகிலுள்ள அவென்யூவில் இவர்கள் வீடு இருக்கிறது. எப்போதும் பிசியாக இருக்கும் இந்த அவென்யூவில் உள்ள வீட்டில் கடந்த மே மாதம் 14 ஆம் தேதி பிணமாக கிடந்தார் ஜெசிகா. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில் அவர் உடலில் ரத்தக் காயங்கள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் இறங்கிய போலீசார், கொலையாளியைத் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் கணவர்தான் ஜெசிகாவை கொன்றது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். தனக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று தொடர்ந்து கூறிவந்தார் மிடேஷ் படேல். ஆனால், வீட்டில் கிடைத்த ஆதா ரங்கள் மற்றும் சிசிடிவி கேமரா உதவியுடன் நடத்திய விசாரணையில் ஜெசிகாவை அவர் கொன்றது உறுதியானது. 

மிடேஷ் படேல் ஓரினச்சேர்க்கையாளராகவும் இருந்துள்ளார். அவருக்கு, ஆண் ஓரினச் சேர்க்கையாளருக்கான டேட்டிங் ஆப் மூலம், ஆஸ்தி ரேலியாவில் வசிக்கும் இந்தியரான, டாக்டர் அமித் படேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். இதனால் மனைவி ஜெசிகாவை கொல்ல முடிவு செய்தார் மிடேல்.

அவரை கொன்றுவிட்டு கிடைக்கும் இன்சூரன்ஸ் பணத்தைப் பெற்றுக்கொண்டு, ஆஸ்திரேலியா சென்று வாழ முடிவு செய்தார். இத்தகவலை அமித் படேலுக்கும் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவத்தன்று ஜெசிகாவின் கையை டேப் மூலம் கட்டினார். பின்னர் அதிகப்படியான இன்சுலி னை ஊசி மூலம் செலுத்தினார். பின்னர் முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடி, கழுத்தை அழுத்திக் கொன்றுள்ளார். இதற்கான ஆதாரங்களை போலீசார், நீதிமன்றத்தில் சமர்பித்தனர். 

இந்த வழக்கில் நீதிமன்றம் மிடேஷ் படேல் குற்றவாளி என்று நேற்று தீர்ப்புக் கூறியது. தண்டனை விவரங்கள் இன்று வெளியிடப்படுகிறது.