உலகம்

பைடனின் கொரோனா டாஸ்க் ஃபோர்ஸ் துணைத் தலைவர்... யார் இந்த விவேக் மூர்த்தி?!

பைடனின் கொரோனா டாஸ்க் ஃபோர்ஸ் துணைத் தலைவர்... யார் இந்த விவேக் மூர்த்தி?!

Sinekadhara

ஜோ பைடனின் கொரோனா டாஸ்க் ஃபோர்ஸ் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், இந்திய வம்சாவளியான டாக்டர் விவேக் மூர்த்தி. இவர் குறித்த விரிவான பின்புலத் தகவல்கள் இதோ...

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜோ பைடன் தனது முதல் வேலையாக, ஒட்டுமொத்த நாட்டையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர தீர்மானித்து இருக்கிறார். இதற்காக கொரோனா டாஸ்க் ஃபோர்ஸ் என்ற பணிக்குழுவை உருவாக்க இருக்கிறார். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தனது முதல் முக்கிய கொள்கை நடவடிக்கையாக இதை அறிவித்து இருக்கிறார். இந்தக் குழுவின் இணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் இந்திய வம்சாவளியான டாக்டர் விவேக் மூர்த்தி. மூர்த்தி, கர்நாடகாவைச் சேர்ந்தவர்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம், யேல் பல்கலைக்கழகத்தில் எம்.டி மற்றும் எம்பிஏ படித்த இவர் போஸ்டனில் உள்ள ப்ரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனையில் தனது உள்மருத்துவ படிப்பை முடித்த பின் ஹார்வர்டு மருத்துவப் பள்ளியில் உள்மருத்துவத்தில் ஆசிரியராக சேர்ந்தார். இதில் நிபுணத்துவம் பெற்ற மூர்த்தி பின்னர், ஒபாமா ஆட்சியில் 19-வது அறுவை சிகிச்சை ஜெனரலாக 15 டிசம்பர் 2014 முதல் 2017 ஏப்ரல் 21 வரை பணியாற்றினார். ஆனால், அடுத்து ட்ரம்ப் நிர்வாகம் அவரை பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டது. இந்த நிர்பந்தம் அப்போதே அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று விமர்சனம் செய்யப்பட்டது.

ஆனால், அறுவை சிகிச்சை ஜெனரலாக பதவி வகித்த காலத்தில் மூர்த்தி சிறப்பான பணிகளை அமெரிக்காவுக்கு செய்தற்காக பாராட்டப்பட்டிருக்கிறார். குறிப்பாக, காலநிலை மாற்றம் எவ்வாறு பொது சுகாதார நெருக்கடியை ஏற்படுகிறது என்பது தொடர்பான ஆய்வுகளைத் திறம்பட நடத்தி முடித்தார். ட்ரம்ப்பால் ஓரங்கட்டப்பட்டாலும் பைடன் பிரச்சாரத்தின் சுகாதாரப் பணிக்குழுவின் இணைத் தலைவர்களாக காங்கிரஸ் பெண் பிரமிளா ஜெயபால் உடன் மூர்த்தியும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரச்சார காலத்தில், மூர்த்தி பைடனின் சுகாதார ஆலோசகராகவும் செயல்பாட்டார்.

அரசியலை மறந்து ட்ரம்ப் நிர்வாகத்துக்கு ஆலோசனை:

அப்போது ஜனநாயக கட்சியின் மாநாட்டில் பைடனை ஆதரித்து பேசிய மூர்த்தி, "கோவிட்-19 தொற்றுநோயை சமாளிக்க நமது தேசத்திற்கு என்ன தேவை... நம்மிடம் திறமை, வளங்கள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளது. ஆனால், சரியான தலைமை இல்லை. தொற்றுநோய் சோதனைகளை விரைவாக எடுத்து முடிவுகளை சரியாக வருகிறது என்பதை உறுதிப்படுத்த மாநிலங்களுடன் இணைந்து செயல்படும் ஒரு தலைவர் நமக்குத் தேவை. எங்களை போன்ற மருத்துவர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு தலைவர் தேவை. அதனால்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.

நான் வந்ததற்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை. ஆனால், பைடனை ஒரு தலைவராக எனக்கு நன்றாக தெரியும்" என்றவர், "ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பைடன் என் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும்போது அவர்களில் பலர் புலம்பெயர்ந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பதைக் கண்டார். அவர் என் பாட்டியின் சக்கர நாற்காலிக்கு அருகில் மண்டியிட்டதை நான் கண்டேன். பாட்டியின் கைகளைப் பற்றிக்கொண்டு அமெரிக்காவை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி எனக் கூறினார்" என்று பைடன் உடனான ஒரு நிகழ்வை குறிப்பிட்டு நெகிழ்ந்தார்.

பைடனின் புலம்பெயர்ந்தோருக்கான ஆதரவை பாராட்டிய அதேநேரம், ட்ரம்ப் நிர்வாகத்தின் குறைகளையும் வெளிப்படையாக சுட்டிக்காட்டினார் இந்த விவேக் மூர்த்தி. 'தி வாஷிங்டன் போஸ்ட்'-டுக்கு அளித்த நேர்காணலில், ட்ரம்ப் நிர்வாகத்தால் கோவிட் தடுப்பூசியை 'அரசியல் மயமாக்குவது' குறித்து கவலை தெரிவித்த மூர்த்தி, "கோவிட்-19 தடுப்பூசியை அங்கீகரிப்பதற்கான வழியை விஞ்ஞானம் வழிநடத்த ட்ரம்ப் நிர்வாகம் அனுமதிக்க அளித்திருக்க வேண்டும். அங்கீகாரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களின் சிக்கல்களில் இருந்து அரசியலை வெளியேற்றுமாறு நான் அவர்களிடம் கூறுவேன்.

இந்தச் செயல்முறையை இயக்கும் நபர்கள் எஃப்.டி.ஏவைச் சேர்ந்த விஞ்ஞானிகள். அவர்களின் தொடர்பு தெளிவாக இருக்கவேண்டும். சரியான வகையான மதிப்பீட்டை உறுதிப்படுத்த தடுப்பூசியின் தரவு மற்றும் விவரங்களில் வெளிப்படைத்தன்மையையும் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்" என்று அரசியலை மறந்து ட்ரம்ப் நிர்வாகத்துக்கு ஆலோசனை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.