உலகம்

மாலத்தீவில் இந்திய நிருபர் கைது

மாலத்தீவில் இந்திய நிருபர் கைது

rajakannan

மாலத்தீவில் நிருபராக பணியாற்றும் இந்தியரை தேசிய பாதுகாப்பு என காரணம் கூறி பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர். 

மாலத்தீவு அதிபர் யாமீன் அப்துல் கயூமுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 9 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் உள்நோக்கம் இருப்பதாக கூறி உச்சநீதிமன்றம் அவர்களை விடுவிக்க கடந்த வாரம் உத்தரவிட்டது. நஷீத் விடுதலை செய்யப்பட்டால், அடுத்து வரும் தேர்தலில் நெருக்கடி ஏற்படும் என்பதால், அதிபர் அப்துல்லா யாமீன் நெருக்கடி நிலையை பிறப்பித்தார். பின்னர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சையிதும், நீதிபதி அலி அஹமத்தும் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டனர்.

அரசியல் குழப்பம் நிலவி வரும் மாலத்தீவில் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் நேற்று மூடப்பட்டன. அங்கு என்ன நடக்கிறது என்பதை வெளியே உள்ளவர்கள் விரைவாக அறிய முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் அமிர்தசரஸை சேர்ந்த மணி சர்மா, பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி ஆதிஷ் ராவ்ஜி படேல் ஆகிய இருவரும் மாலத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்சில் இயங்கி வரும் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்தில் இருவரும் நிருபர்களாக பணியாற்றி வருகின்றனர். இருவரும் பாதுகாப்பு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.