உலகம்

"ஆப்கானுக்கு தேவையான உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது” - தலிபான்கள் தகவல்

JustinDurai
மனிதாபிமான ரீதியில் ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்துள்ள நிலையில் முதல்முறையாக அவர்களுடன் இந்திய குழு ஒன்று பேச்சு நடத்தியது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இச்சந்திப்பில் வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் ஜெ.பி.சிங்கும் தலிபான்கள் தரப்பில் ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசின் துணை பிரதமர் அப்துல் சலாம் ஹனாஃபியும் பேசினர்.
இதன் பின் அறிக்கை வெளியிட்டுள்ள துணை பிரதமர் ஹனாஃபி, போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என இந்தியா தெரிவித்துள்ளதாக கூறினார். எனினும் இதுகுறித்து இந்திய தரப்பில் இருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை.