உலகம்

இந்தியா-அமெரிக்கா உறவில் சிக்கல்? பிரச்னைகள் என்ன?

இந்தியா-அமெரிக்கா உறவில் சிக்கல்? பிரச்னைகள் என்ன?

webteam

இந்தியா-அமெரிக்கா உறவை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ நாளை இந்தியா வருகிறார். அவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஆகியவர்களை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இம்மாத இறுதியில் ஜப்பான் நாட்டில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் போது பிரதமர் மோடி மற்றும் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் சந்திப்பு முன்னேற்பாடாக இது அமையும் என்றும் கூறப்படுகிறது. 

அது சரி, இந்தியா-அமெரிக்கா இடையே நிலவும் முக்கிய பிரச்னைகள் எனென்ன?

வர்த்தகம்:

இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், அமெரிக்கா இந்தியா பொருட்களுக்கு அளித்து வந்த வரி விலக்கிற்கான ‘Generalised System of preferences’ என்ற அந்தஸ்த்தை ரத்து செய்தது. இதற்கு இந்தியாவும் அமெரிக்காவின் 28 பொருட்களுக்கான சுங்கவரியை அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது. அத்துடன் இந்தியாவின் இரும்பு மற்றும் அலுமினியம் ஆகியவற்றுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்தது. இது இந்தயாவின் ஏற்றுமதியை பாதித்துள்ளது. 

மேலும் அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் பதட்டமான சூழலும் இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிடமிருந்து இறக்குமதி செய்துவந்த கச்சா எண்ணெய்யையும் அமெரிக்கா விதித்த பொருளாதார தடையினால் இந்தியா நிறுத்திக் கொண்டது. இதன் மூலம் அந்த அளவிலான கச்சா எண்ணெய்யை இந்தியா எங்கு சரி செய்யும் என்ற பிரச்னை எழுந்துள்ளது. அத்துடன் இந்தியா ஈரானில் செயல்படுத்திவரும் சாபகார் துறைமுகம் திட்டத்திற்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன் அமெரிக்கா-சீனா இடையே நிலவும் வர்த்தகம் சார்ந்த பிரச்னைகளும் உலக பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் அதுவும் இந்திய வர்த்தகத்திற்கு பாதிப்பாக அமையும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆன்லைன் வர்த்தகம்: 

இந்தியா ஆன்லைன் வர்த்தகத்திற்கு (e-commerce) புதிய கொள்கையை விதித்துள்ளது. இந்தியாவின் புதிய இணையதள விற்பனை விதிகள் ஆன்லைனில் விற்பனை செய்யும் பொருட்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஆன்லைன் விற்பனையில் இயங்கும் நிறுவனம் ஒன்று, அவர்களின் பங்குகளை வைத்துள்ள நிறுவனங்களின் பொருட்களை விற்க முடியாது. அதேபோல அவர்கள் பிரத்யேக ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களின் பொருட்களையும் இனிமேல் அவர்களின் சொந்த இணையதளத்தில் விற்கமுடியாது. இந்தியாவின் இந்தப் புதிய கொள்கைக்கு அமேசான்,வால்மார்ட் உள்ளிட்ட அமெரிக்கா நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

தரவு பாதுகாப்பு:

இந்திய அரசு இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு தொழில்நிறுவனங்களுக்கு தரவுகளை சேமிப்பதில் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி இந்தியர்களின் தரவுகளை இந்தியாவிற்குள் சேமித்து வைக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை விடுத்துள்ளது. இந்தக் கட்டுப்பாட்டிற்கு ஃபேஸ்புக், மாஸ்டர் கார்டு,விசா உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

பாதுகாப்புத் துறை:

பாதுகாப்பு துறையில் இந்தியா-அமெரிக்கா இடையே உறவு பலப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்கா இந்தியாவை அதன் ‘Major Defence partner’  என்று அறிவித்தது. இதன்பிறகு அமெரிக்கா இந்தியாவிற்கு பாதுகாப்புதுறை சார்ந்து தொழில்நுட்பங்களை உள்ளிட்டவற்றை பகிர ஆரம்பித்தது. எனினும் இந்தியா ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 என்ற விமான கட்டுப்பாட்டுக் கருவியை வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஏனென்றால், ரஷ்யாவின் எஸ்-400 விமான பாதுகாப்பு சாதனம் எஃப்-35வும் ஒரே இடத்திலிருந்தால் அதன்மூலம் எஃப்-35 ரக விமானத்திலுள்ள ரேடார் வசதிகள் மற்றும் விமானத்திலுள்ள தொழில்நுட்பங்கள் குறித்து ரஷ்யா அறிந்துக் கொள்ள முடியும். ஆகவே அமெரிக்கா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. 

மருத்துவம்:

இந்திய அரசு மருந்து பொருட்களுக்கு ‘மருந்து பொருட்களின் விலை கட்டுப்பாடு ஆணை’ மூலம் விற்கும் விலைக்கு கட்டுப்பாடு விதித்து வருகிறது. இதன்மூலம் இந்திய அரசு 57 புற்றுநோய் தடுப்பு சாதனங்களுக்கு விலை கட்டுப்பாடு அறிவித்துள்ளது. மேலும் 42 புற்றுநோய் தடுப்பு மருந்துகளுக்கு விலை நிர்ணயிப்பதில் விதியை வகுத்துள்ளது. இந்த விலை கட்டுப்பாட்டிற்கு அமெரிக்க நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

5ஜி தொழில்நுட்பம்:

இந்திய அரசு தற்போது சோதனை முறையில் 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியாவில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தச் சோதனை முயற்சிக்கு சீனா நிறுவனமான ஹூவாய் (Huawei) விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிகிறது. ஏனென்றால் ஹூவாய் நிறுவனம் உளவு பார்க்கும் செயலில் ஈடுபட்டுள்ளது என அமெரிக்கா கூறுகிறது. அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டிற்கு ஹூவாய் நிறுவனம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் அமெரிக்கா வெளியுறவுத் துறை செயலாளர் எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இத்தகைய சவாலகள் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் நீடித்து வருகிறது. இந்தச் சவால்களை இம்முறை எதிர்கொள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் பொருத்தமானவராக இருப்பார். ஏனென்றால் 2008ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா அணுஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜெயசங்கர். அத்துடன் இவர் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடனும் பல முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். எனவே இம்முறை இந்தியா இந்தச் சவால்களை நல்ல முறையில் கையாளும் என்று எதிர்பார்க்கபடுகிறது.