உலகம்

 இந்தியா - துருக்கி உறவில் விழுந்த விரிசல்? - தடம் மாறும் அதிபர் எர்டோகன்

 இந்தியா - துருக்கி உறவில் விழுந்த விரிசல்? - தடம் மாறும் அதிபர் எர்டோகன்

webteam

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் பேசியதற்கு இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மைக் காலங்களாக இந்தியாவுக்கும், துருக்கிக்கும் இடையே மோதல் போக்கு உருவாகி வருகிறது. இதற்கு என்ன காரணம்?

இந்தியாவுக்கும், துருக்கிக்கும் இடையே வரலாற்று ரீதியிலான உறவுகள் இருக்கின்றன. தூதரக ரீதியிலான உறவுகள், தூதரக அதிகாரிகள் பரிமாற்றம் ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையே 1948 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வந்தது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1960 ஆம் ஆண்டு துருக்கிக்குப் பயணம் மேற்கொண்டார். அவருக்குப் பின்னால், 1988 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி துருக்கி சென்றிருந்தார். 2003 செப்டம்பரில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மேற்கொண்ட துருக்கி பயணம் மிகுந்த வெற்றிகரமாக அமைந்தது. அந்தப் பயணத்தின் மூலம் இந்தியாவைப் பற்றிய பார்வை முழுமையாக மாறியது.

இப்படி இரு தரப்புகளுக்கும் இடையே நெருக்கமாக நீடித்து வந்த உறவில் லேசான விரிசல் ஏற்பட்டதற்கு காரணம் தற்போதைய துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன். கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற எர்டோகன், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி தனது துருக்கி சுற்றுப் பயணத்தை அதிரடியாக ரத்து செய்தார்.

இது ஒருபுறம் இருக்க, பாகிஸ்தானுடனான ராணுவ ஒத்துழைப்பையும் துருக்கி அதிகரித்துக் கொண்டே வந்தது. பாகிஸ்தான் கடற்படைக்காக நான்கு போர் கப்பல்களை வடிவமைத்து தரும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது. துருக்கியின் இந்த நடவடிக்கைகள் அந்நாட்டுடனான நெருக்கமான உறவில் இருந்து இந்தியா வெளியேறுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதனால், துருக்கி கேட்ட அணுசக்தி மூலப் பொருட்களை வழங்க இந்தியா ‌மறுத்தது.

இதனால் ஆவேசமடைந்த துருக்கி மெல்ல தனது நட்பு கரத்தை பாகிஸ்தான் பக்கம் திருப்ப முடிவெடுத்தது. இந்தியாவுடனான நட்பு வெறுப்பாக மாறுவதற்கு துருக்கியின் மதபோதகரான முகமது ஃபெத்துல்லா குலேனும் ஒரு முக்கிய காரணியாக இந்தச் சமயத்தில் இருந்தார். 2016 ஆம் ஆண்டில் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க அவர் சதிச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால், குலேன் பென்சில்வேனியாவில் தஞ்சமடைந்தார். அவரது மதப் பள்ளிகள் இந்தியாவில் பல்வேறு இடங்‌களில் அமைவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்து விட்டதாக துருக்கி குற்றம்சாட்டியது.

இதன் காரணமாகவே இந்தியாவுடனான நெருக்கத்தை படிப்படியாக துண்டித்துக் கொண்ட துருக்கி, தற்போது பாகிஸ்தானுடனான உறவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா - துருக்கி இடையே இருந்து வந்த உறவில் விரிசல் பெரிதாகி இருக்கிறது.