அமைதி உச்சி மாநாடு pt web
உலகம்

ரஷ்யா - உக்ரைன் போர்... தீர்வு ஏற்படுத்துவதற்காக நடந்த அமைதி உச்சி மாநாடு.. கையெழுத்திடாத இந்தியா..

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போருக்கு தீர்வு ஏற்படுத்துவதற்காக சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அமைதி உச்சி மாநாட்டில் இந்தியா கையெழுத்திடவில்லை.

PT WEB

சுவிட்சர்லாந்தின் லூசர்ன் நகரில் ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதி ஏற்படுத்துவதற்கான உச்சி மாநாடு நடைபெற்றது. உக்ரைன் அதிபர் 2022ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுட்டிக்காட்டிய 10 அம்ச அமைதித் திட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் உச்சி மாநாடு நடைபெற்றது.

- ரஷ்ய தாக்குதலை நிறுத்துதல்,

- ரஷ்ய படைகளை திரும்பப் பெறுதல்,

- போருக்கு முந்தைய எல்லைகளை மீட்டெடுத்தல்,

- ரஷ்யாவின் போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை நிறுவுதல்,

- பிராந்திய ஒருமைப்பாட்டை மீட்டெடுத்தல்

போன்ற கோரிக்கைகள் இதில் அடங்கும்.

எனினும், உக்ரைனின் விதிமுறைகளை ரஷ்யா ஏற்றுக்கொள்ளவில்லை. அதேநேரத்தில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து உக்ரைன் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு, நேட்டோ அமைப்பில் சேரும் முடிவை கைவிட்டால், போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இதை நிராகரித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உலகின் பெரும்பகுதி நாடுகள் தங்கள் பக்கம் இருப்பதாக கூறுகிறார்.

இந்த அமைதி உச்சி மாநாட்டில் 83 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். மாநாட்டில் சீனா பங்கேற்கவில்லை. அமைதி உச்சி மாநாட்டிற்கு ரஷ்யாவுக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், இந்த மாநாடு நேர விரயம் என ரஷ்யா விமர்சித்திருந்தது. பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியா தரப்பில் வெளியுறவுத்துறை அதிகாரி பவன் கபூர் கலந்துகொண்டார்.

அமைதி உச்சி மாநாட்டின் 2ஆம் மற்றும் இறுதி நாள் அமர்வில் பவன் கபூர் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், “மிகவும் சிக்கலான மற்றும் அழுத்தமான பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான வழியை ஆராய்வதற்காகவே அமைதி உச்சி மாநாட்டில் இந்தியா இணைந்தது. எனவே அமைதி உச்சி மாநாட்டில் இருந்து வெளிவரும் எந்த அறிக்கையிலும் இந்தியாவுக்கு உடன்பாடில்லை.

பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியில் மட்டுமே உக்ரைன்-ரஷ்யா இடையே அமைதியை ஏற்படுத்த முடியும். இதற்கு இரண்டு நாடுகளின் பங்களிப்பை இந்தியா விரும்புகிறது. உக்ரைனில் தற்போதைய போர்ச் சூழல் கவலை அளிக்கிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர நடத்தப்படும் எந்தவொரு அமைதி பேச்சுவார்த்தைக்கும் இந்தியா ஒத்துழைக்கும்” என தெரிவித்தார்.