உலகம்

நடுக்கடலில் கொள்ளையர்கள்: கப்பலை மீட்டது இந்திய, சீன நேவி

webteam

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட இருந்த கப்பலை இந்திய, சீன கப்பல்கள் கூட்டாகச் சேர்ந்து மீட்டன.

மலேசியாவின் கெலாங் துறைமுகத்தில் இருந்து ஏமனின் ஏடன் துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் ஒன்று சென்றது. அதில், பிலிப்பைன்ஸை சேர்ந்த 19 ஊழியர்கள் இருந்தனர். ஏடன் வளைகுடா பகுதியில் சென்றபோது, சோமாலிய கடற்கொள்ளையர்கள் அந்தக் கப்பலில் ஏறினர். இதனால் திடுக்கிட்ட ஊழியர்கள், பாதுகாப்பு அறைக்குள் புகுந்து கதவை பூட்டி அபாய எச்சரிக்கை கொடுத்தனர். இதுபற்றி சர்வதேச கடற்கொள்ளை தடுப்பு பணியில் இருந்த கடற்படை கப்பல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்திய கடற்படை கப்பல்கள் ஐஎன்எஸ் மும்பை, ஐஎன்எஸ் தர்கஸ் ஆகிய போர்கப்பல்கள் ஏடன் வளைகுடா பகுதிக்கு விரைந்தன. அதற்குள் அங்கு சீன போர்கப்பல் யூலினும் வந்தது. இந்திய போர்க்கப்பலில் இருந்து சென்ற ஹெலிகாப்டர் சரக்கு கப்பலின் மேலே பறந்தபடி, கண்காணிக்க,

சீன கடற்படை குழு அந்த கப்பலுக்குள் சென்று, ஊழியர்களை மீட்டனர். கடற்படை கப்பல்கள் நெருங்கி வருவதை பார்த்ததும், கடற்கொள்ளையர்கள் தப்பி விட்டனர்.

கொள்ளையர்களிடமிருந்து கப்பலை மீட்க உதவிய இந்திய கடற்படைக்கு சீனாவும், சீனாவுக்கு இந்தியாவும் மாறி மாறி பாராட்டுத் தெரிவித்துள்ளன.