கடந்த ஆண்டு (2023) ஜனவரி 23ஆம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த ஜான்வி கந்துல்லா என்ற 23 வயது இந்திய வம்சாவளி மாணவி, அமெரிக்காவின் சியாட்டிலில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது காவல் அதிகாரியான கெவின் டேவ் என்பவர் ஓட்டிச்சென்ற கார் பயங்கரமாக மாணவியின் மீது மோதியது. இதில் 100 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட ஜான்வி கந்துல்லா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தற்போது விபத்து ஏற்படுத்திய கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரிக்கு எதிரான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அமெரிக்க அரசு அவரை விடுத்துள்ளது. மற்றொரு அதிகாரி டேனியல் ஆடரர், கிண்டல் செய்யும் வகையில் பேசியதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து போலீஸ் துறையே, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய ஜான்வி கந்துலாவின் குடும்பத்தினர், ” விபத்து ஏற்படுத்தியவர் விடுவிக்கப்பட்ட செய்தி எங்களுக்கு பேரதிர்ச்சியை அளிக்கிறது. எங்கள் மகளின் கொலை வழக்கைப் பற்றி நாங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோசமான செய்திகளையே பெறுகிறோம்” என வருத்தம் தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து சியாட்டிலில் இருக்கும் இந்தியத் துணைத் தூதரகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ” ஜான்வி கந்துலாவின் வழக்கு தொடர்பாக அவரின் குடும்பப் பிரதிநிதிகளுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு நீதியை உறுதிசெய்வதில் தொடர்ந்து அனைத்து ஆதரவையும் வழங்கிவருகிறோம். சரியான தீர்வுக்காக சியாட்டில் காவல்துறை உட்பட உள்ளூர் அதிகாரிகளிடம் இந்த விஷயத்தை வலுவாகப் பேசிவருகிறோம். இந்த வழக்கு இப்போது சியாட்டில் சிட்டி அட்டர்னி அலுவலகத்துக்குப் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. சியாட்டில் காவல்துறையின் நிர்வாக விசாரணை முடிவடையும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். மேலும், வழக்கின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணிப்போம் “என பதிவிட்டுள்ளது.