இந்திய பெருங்கடலில் சீன போர்க்கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துவருவதால், வளைகுடா கடற்பகுதியில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் இன்று முதல் பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்கின்றன.
இந்திய எல்லைப் பகுதிகளை அத்துமீறி ஆக்கிரமிக்க சீனா முயற்சித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவும் படைகளை நிறுத்தியுள்ளது. இதனிடையே, இந்திய பெருங்கடலில் சீன போர்க் கப்பல்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த இரு மாதங்களில், சீனாவின் 13 போர்க் கப்பல்கள் இந்திய பெருங்கடலில் நடமாடியதை, இந்திய கடற்படை செயற்கைக்கோளான ருக்மிணி வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவை மிரட்டும் வகையில் நடந்துகொள்ளும் சீனாவின் இந்த போக்கு, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வளைகுடா கடற்பகுதியில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் போர்கப்பல்களை நிலைநிறுத்தி இன்றுமுதல் கூட்டு பயிற்சி மேற்கொள்கின்றன.