இம்ரான் கான் ட்விட்டர்
உலகம்

“பாகிஸ்தானுக்கும் இலங்கை நிலை உருவாகும்” - இம்ரான் கான்

பாகிஸ்தானிலும் இலங்கையைப் போன்று நிலை ஏற்படும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் (பி.டி.ஐ.) தலைவரான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

Prakash J

அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து, ஆட்சி அமைத்துள்ளன. அதன்படி, நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும் முன்னாள் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ளார். அதுபோல், முன்னாள் அதிபரான ஆசிப் அலி சர்தாரி நாட்டின் புதிய அதிபராகப் பதவியேற்று உள்ளார்.

இந்த நிலையில், பாகிஸ்தானிலும் இலங்கையைப் போன்று நிலை ஏற்படும் என முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் (பி.டி.ஐ.) தலைவரான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”2024 பொதுத் தேர்தலில், எங்களுடைய கட்சி திட்டமிட்டே வெளியேற்றப்பட்டது. இருந்தபோதிலும் தேர்தலின்போது வாக்காளர்கள், அதற்குப் பதிலடி கொடுத்தனர். எனினும், வாக்கு வழியில் ஏற்பட்ட மாற்றம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தேர்தல் முடிவை மாற்றி, மோசடியில் ஈடுபட்டு தேசத்தின் நம்பிக்கை உடைத்து நொறுக்கப்பட்டிருக்குள்ளது. இச்சூழலில், இலங்கையில் நடந்ததுபோன்று பாகிஸ்தானிலும் நடக்கும்.

சர்வதேச நாணய நிதியகத்திடம் இருந்து இறுதியாக ஒரு கடன் தொகையை பாகிஸ்தான் கேட்டுப் பெறவுள்ள சூழலில், பணவீக்கத்தின் புதிய அலை தோன்றும். அதன்பின் நாட்டில், மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடும் நிலை ஏற்படும். என்னுடைய அனைத்து கணிப்புகளும் உண்மையென நிரூபிக்கப்பட்டு உள்ளன. பாகிஸ்தானில் அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்களிடம் ஒப்பந்தம் போடுவதற்காக, அவர்களிடம் பேச்சுவார்த்தை எதிலும் நாங்கள் ஈடுபடவில்லை. தேர்தல் மோசடிக்கு எதிராக, எங்களுடைய கட்சி அமைதியான வழியில் போராடும். இதற்காக நாங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம். ஏப்ரல் 2ஆம் தேதி செனட் தேர்தல் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த தேர்தலிலும் கூட, குதிரை பேரம் நடைபெறும்” என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இம்ரான் கட்சி போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டபோதும், அவரது ஆதரவாளர்கள் சுயேட்சையாக 93 இடங்களில் வெற்றிபெற்றிருந்தனர். இது, நவாஸ் ஷெரீப் கட்சி வென்ற இடங்களைவிட (75) அதிகம்.

கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது, அவ்வரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றார். இதனால், மேலும் ஆத்திரமடைந்த மக்கள், அதே ஆண்டு ஜூலை 9ஆம் தேதி, அதிபர் மாளிகை, பிரதமரின் அதிகாரப்பூர்வ மாளிகை ஆகியவற்றில் நுழைந்து முற்றுகையிட்டனர்.

மேலும் அதிபர் மாளிகை, பிரதமர் மாளிகையில் சில நாட்கள் தங்கியிருந்ததுடன் பொருட்களையும் சூறையாடினர். இது உலக அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்கள் எழுச்சியை ஆட்சியாளர்களுக்கு உணர்த்திய அவர்கள், பின்னர் தாங்களாகவே அங்கிருந்து வெளியேறினர். அதன் பின்னரே இலங்கை பாதுகாப்பு படையினரால் அதிபர் மற்றும் பிரதமர் அலுவலகங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுக்க முடிந்தது. இதுபோன்ற ஒரு சூழல் பாகிஸ்தானிலும் ஏற்படும் என இம்ரான் கான் தற்போது தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முற்றுகையிட்ட மக்கள்

இம்ரான் கான் அப்படிச் சொல்வதற்கு காரணமிருப்பதாக உலக அரசியலாளர்கள் கருதுகின்றனர். காரணம் கடந்த சில வருடங்களாகவே பாகிஸ்தானின் நிதிநிலைமை மோசமாக உள்ளது. ஏற்கெனவே நாடுகளிடம் வாங்கிய கடன் கொடுக்கப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக அந்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாகிஸ்தான் அரசு, பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மேலும் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதைத் திருப்பிச் செலுத்தும் பட்சத்தில் மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்குமானால், மக்கள் அதைப் பொறுத்துக்கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக அரசியலாளர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிக்க: “நீங்கள் இந்திய குடிமக்கள்தான் என நிரூபிக்க வேண்டும்” - CAA, NRC, NPR குறித்து அச்சம் எழுவது ஏன்?