உலகம்

"ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி" - சர்ச்சை பேச்சினால் இம்ரானுக்கு வலுக்கும் எதிர்ப்பு !

"ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி" - சர்ச்சை பேச்சினால் இம்ரானுக்கு வலுக்கும் எதிர்ப்பு !

jagadeesh

அல்-கொய்தா அமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடனை "தியாகி" எனக் குறிப்பிட்டுப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு, மே மாதம் 2 ஆம் தேதி, பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் நுழைந்த அமெரிக்கப் படையினர், அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை சுட்டு வீழ்த்தினர். ஒசாமா, அங்குப் பதுங்கியிருந்தது பற்றித் தங்களுக்குத் தெரியாது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாகத் தெரிவித்தது. இந்நிலையில் ஒசாமா பின்லேடன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இம்ரான்கான் பேசியுள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அவர் " பாகிஸ்தானின் அபோட்டாபாத்திற்கு வந்த அமெரிக்கர்கள், தியாகி ஒசாமா பின்லேடனைக் கொன்றனர். இதனால்தான் இரு நாட்டு உறவிலும் விரிசல் விழுந்தது" என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினரும் பிரபலங்களும் இம்ரான்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர், கவாஜா ஆசிஃப், "இம்ரான்கான், வரலாற்றைத் திரித்துப் பேசியுள்ளார். இன்று அவர் ஒசாமா பின்லேடனை தியாகி என்று சொல்லியிருக்கிறார்" எனக் கொதித்து எழுந்துள்ளார்.