மெட்டா நிறுவனத்தில் வேலை கிடைத்ததும், இந்தியாவிலிருந்து கனடாவுக்கு இடம் பெயர்ந்த நபர், வேலைக்கு சேர்ந்த அடுத்த 2 நாட்களில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மெட்டா நிறுவனம் 11,000க்கு அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மற்றும் புதிதாக பணியமர்த்தலையும் நிறுத்தி வைத்துள்ளது. மெட்டாவின் 18 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக செய்யப்பட்ட மிக பெரிய பணிநீக்கம் இது தான்.
இந்நிலையில், மெட்டா நிறுவனத்தில் வேலை கிடைத்த இந்தியர் ஹிமான்சு பணிநீக்கம் செய்யப்பட்ட 11,000க்கும் அதிகமான ஊழியர்களில் ஒருவரானது சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது. மெட்டா வேலைக்காக ஹிமான்சு இந்தியாவிலிருந்து கனடாவுக்கு இடம் பெயர்ந்த இரண்டு நாட்களில் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து, ஹிமான்சு தனது லிங்க்ட்இன் பகுதியில், ’ நான் மெட்டாவில் சேர கனடாவிற்கு இடம்பெயர்ந்தேன். வேலைக்கு சேர்ந்த 2 நாட்களுக்குப் பிறகு பெரும் பணிநீக்கத்தால் நானும் பாதிக்கப்பட்டு எனது பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. எனக்கு அடுத்ததாக என்ன காத்திருக்கிறது என்று எதுவும் தெரியவில்லை. கனடா அல்லது இந்தியாவில், சாப்ட்வேர் இன்ஜினியருக்கு வேலை இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பெரும் பணிநீக்கத்திற்கு பிறகு, மெட்டா வேலைக்காக இடம் பெயர்ந்தவர்களுக்காக மார்க் என்ன சொல்கிறார் என்பதை இங்கு விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.. எனக்கு தெரியும் இது கடினமான நேரம் என்று”-ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து மார்க் சொல்வதென்ன?
இதேபோல், தற்போது மகப்பேறு விடுப்பில் இருக்கும் மெட்டா பெண் ஊழியர் ஒருவர், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் தானும் இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். அன்னேகா படேல் என்ற மெட்டா நிறுவன ஊழியர், ’தனது மூன்று மாத மகளுக்கு தாய்பால் எடுத்து வைக்க, அதிகாலை 3 மணிக்கு எழுந்ததாகவும், அப்போது பணிநீக்கங்கள் தொடர்பாக மின்னஞ்சல்கள் பார்த்துகொண்டிருக்கும் போது, காலை 5:35 மணிக்கு தானும் பணிநீக்கத்தில் சேர்க்கப்பட்டதாக ஒரு மின்னஞ்சல் வந்ததாக’ பதிவிட்டுள்ளார்.
மேலும் , மெட்டா நிறுவனத்தின் இந்த பெரும் பணிநீக்கத்தில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள், பலரும் தங்களது கையறு நிலையை குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.