உலகம்

பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தால் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட தயார் - ட்ரம்ப்

பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தால் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட தயார் - ட்ரம்ப்

webteam

மோடியும், இம்ரான்கானும் கோரிக்கை விடுத்தால் காஷ்மீர் பிரச்னையில் தலையிடத் தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

காஷ்மீர் பிரச்னையில் மூன்றாம் நபர் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதுதான் தொடக்கம் முதலே இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு,செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜப்பானில் தன்னை சந்தித்தபோது, காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய விருப்பமா என மோடி கேட்டார் என்று தெரிவித்தார். இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் சேர்ந்து தன்னை மத்தியஸ்தத்திற்கு அழைத்தால் அதற்கு தயாராக இருப்பதாக தாம் தெரிவித்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்தார். 

ட்ரம்பின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்ட இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார்,  “காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்து வைக்கும்படி டிரம்ப்பிடம் பிரதமர் மோடி ஒருபோதும் கேட்டுக் கொள்ளவில்லை. பாகிஸ்தான் உடனான பிரச்னைகளை இரு நாடுகளும் தங்களுக்குள் மட்டுமே பேச வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்திய பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் அருமையான மனிதர்கள். இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்னை நீண்டகாலமாக நிலவி வருகிறது. இரு நாட்டு பிரதமர்களும் கோரிக்கை வைத்தால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட அமெரிக்கா தயாராக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.