IBM Employee  Twitter
உலகம்

15 ஆண்டுகளாக Sick Leave-ல் இருக்கும் IT ஊழியர், ஊதிய உயர்வு கேட்டு வழக்கு... நீதிபதி வைத்த ட்விஸ்ட்!

அமெரிக்காவில் 15 ஆண்டுகளாக Sick Leave-ல் இருக்கும் ஊழியர் ஒருவர், தனக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை எனக்கூறி தான் வேலைபார்க்கும் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளார்.

Justindurai S

அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம்-இல் பணியாற்றி வருபவர் இயன் கிளிஃபோர்ட் (Ian Clifford). இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நோய்வாய்ப்பட்ட விடுப்பில் (Sick Leave) இருந்து வருகிறார். லிங்க்ட்இன் தளத்தில் இவர் குறிப்பிடப்பட்டுள்ள சுயவிவரத்தின்படி, கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ‘மருத்துவ ரீதியாக ஓய்வு பெற்றவராக’ (Medically Retired) இருக்கிறார் இவர்.

IBM Employee

ஐபிஎம் நிறுவனத்துடன் இயன் கிளிஃபோர்ட் 2013ஆம் ஆண்டில் செய்துகொண்ட சமரச ஒப்பந்தத்தின்படி, அவர் நிறுவனத்தின் இயலாமை ஓய்வூதியத் திட்ட பயனாளியாக (Disability plan) சேர்க்கப்பட்டிருக்கிறார். இத்திட்டத்தின்படி அவர் உடல்ரீதியாக பணிபுரிய இயலாதவராக கருதப்படுவார். அதனால்தான் அவர் Medically Retired என்ற வகையின் கீழ் வந்துள்ளார்.

இந்த வகையின்கீழ் வரும் ஊழியர்கள், பணிபுரியாவிட்டாலும் நிறுவனத்தின் ஊழியராகவே கருதப்படுவர். அவர்களின் ஓய்வுக்காலம் வரை, அவர்கள் ஏற்கெனவே பெற்றுவந்த ஊதியத்தில் 75 சதவீத தொகையை பெற்று வருவர். இதுபடி இயன் கிளிஃபோர்டுக்கும் ஒவ்வொரு மாதமும் பணம் கிடைத்துள்ளது என கூறப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் இயன் கிளிஃபோர்ட் ஆண்டுக்கு 54,028 பவுண்டுகள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 55 லட்சம்) ஊதியமாக கிடைக்கும். அவர் ஓய்வு பெறும் 65-வது வயது வரை இந்த தொகை கிடைத்துக்கொண்டே இருக்கும்.

இந்நிலையில், விடுப்பு தொடங்கியதிலிருந்து கடந்த 15 ஆண்டுகளாக தனக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை எனக்கூறி இயன் கிளிஃபோர்ட் ஐபிஎம் நிறுவனத்திற்கு எதிராக வேலைவாய்ப்பு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்திருக்கிறார். 15 ஆண்டுகளாக தனக்கு சம்பளம் உயர்த்தப்படாததால் தான் இயலாமை பாகுபாட்டுக்கு (Disability Discrimination) உள்ளாக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். மேலும் தனக்கு தற்போது கிடைத்துவரும் ஓய்வூதியம் போதுமானதாக இல்லை எனவும் வாதிட்டிருக்கிறார்.

Ian Clifford

இந்நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, இயன் கிளிஃபோர்டின் கோரிக்கையை நிராகரித்தார். “செயல்படும் ஊழியர்களே ஊதிய உயர்வைப் பெற தகுதியுடைவர்கள் ஆவர். செயலற்ற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது என்பது கட்டாயம் அல்ல. மனுதாரருக்கு கிடைத்துவரும் ஓய்வூதியம் கணிசமான பலன்தான். அது குறைவானது என்று சொல்ல முடியாது” எனக்கூறி வழக்கை முடித்துவைத்தார்.